கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற மண்டைக்காடு அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் கோயில், ‘பெண்களின் சபரிமலை’ என்று பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்தக் கோயிலின் உலகப் புகழ்பெற்ற வருடாந்திர மாசி கொடைவிழா, இன்று காலை பக்திப் பரவசத்துடன் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்த நிலையில், மங்கல இசை முழங்க கோயிலின் கொடிமரத்தில் புனிதக் கொடி ஏற்றப்பட்டது. 10 நாட்கள் நடைபெறும் இந்த மகா திருவிழாவைக் காண்பதற்காகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து குவிந்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் இருமுடி கட்டிச் செல்வது போல, இந்தப் பகவதி அம்மன் கோயிலுக்குப் பெண்கள் இருமுடி கட்டி வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது மிகவும் தனித்துவமான அம்சமாகும்.
இந்தக் கொடியேற்ற நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாகக் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதியரசர் விக்டோரியா கௌரி, கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மற்றும் திருக்கோயில் இணை ஆணையர் ஜான்சிராணி உட்படப் பல முக்கியப் பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றுச் சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரின் தாயார் தமிழ்செல்வி வசந்தகுமார், காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்டத் தலைவர் கே.டி. உதயம், மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் சீனிவாசன் மற்றும் மண்டைக்காடு பேரூராட்சித் தலைவர் ராணி ஜெயந்தி ஆகியோரும் கலந்துகொண்டனர். மேலும், காங்கிரஸ் விளையாட்டுத் துறை கிழக்கு மாவட்டத் தலைவர் அருண், மண்டைக்காடு பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் சுந்தர், வெள்ளிமலை பேரூர் காங்கிரஸ் தலைவர் தயனேஷ் உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகள் திரளாகப் பங்கேற்றுச் சிறப்பித்தனர். பக்தர்களின் வசதிக்காகக் கூடுதலாகப் பேருந்துகள் இயக்கப்பட்டதோடு, பலத்த போலீஸ் பாதுகாப்பும் மாவட்ட நிர்வாகத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
