ஜோலார்பேட்டை அருகே நடைபெற்ற வெல்லும் தமிழ் பெண்கள் நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பே வளாகத்தை விட்டு வெளியேறிய பெண்கள். மண்டபமே வெறிச்சோடி காணப்பட்ட நிலையில் முதலமைச்சர் பேசிக்கொண்டிருந்த போதே நாற்காலிகள் அடுக்கப்பட்ட அவலம்.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மகளிர் உரிமை திட்டத்தில் விடுபட்ட சுமார் 13 லட்சம் பெண்களுக்கு புதியதாக மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகை வழங்கும் நிகழ்ச்சியை வெல்லும் தமிழ் பெண்கள் என்கிற தலைப்பில் சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள 1408 பெண்களுக்கு புதியதாக மகளிர் உரிமை தொகை வழங்குவதற்கான வெல்லும் தமிழ் பெண்கள் நிகழ்ச்சி ஜோலார்பேட்டை அருகே உள்ள தனியார் திருமண வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு அழைத்துவரப்பட்ட 1408 பெண்கள் காலை 9 மணிக்கே வரவழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதிய உணவு கூட இல்லாமல் தேனீர் தண்ணீர் கூட கிடைக்காமல் மாலை 6 மணி வரை காத்திருந்த பெண்கள் ஒருவர் பின் ஒருவராக நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பே வெளியேறி சென்றனர்.
இறுதியாக சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசியபோது வளாகம் முழுவதும் இருந்த நாற்காலிகள் அடுக்கப்பட்ட அவல நிலை காணப்பட்டது.
இறுதியாக யாருமே இல்லாத மண்டபத்தில் முதலமைச்சர் பேசி முடித்த பின்பு ஏற்கனவே தயார் நிலையில் இருந்த ஒரு சிலருக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் மற்றும் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர்கள் மகளிர் உரிமைத் தொகைக்கான அடையாள அட்டையை வழங்கினர்.
















