குத்தாலம் அருகே எழுமகளூரில் சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது:- 6000 பாண்டி மது பாட்டில்களை பறிமுதல்:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்ட விரோதமாக சாராயம் மற்றும் மதுபான கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் தீவிர மது வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மயிலாடுதுறை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பாலாஜிக்கு பாலையூர் காவல் சரகம், எழுமகளுரில் சட்டவிரோதமாக பாண்டிச்சேரி மது விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மயிலாடுதுறை உட்கோட்ட காவல்துறையினர் பாலையூர் காவல் சரகம், எழுமகளுர் பகுதியில் நடத்திய மது வேட்டையில் சட்டவிரோதமாக பாண்டிச்சேரி சாராய விற்பனையில் ஈடுபட்ட எழுமகளூர் வடக்கு தெருவை சேர்ந்த விஜயலெட்சுமி(63) என்பவர் கைது செய்யப்பட்டார்.
மேலும், அவர் விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 180 மி.லி. அளவுள்ள பாண்டிச்சேரி சாராயம் உள்ளடங்கிய 6000 எண்ணிக்கையிலான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், விஜயலெட்சுமி மீது பாலையூர் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
மேலும், சட்டவிரோதமாக மதுவிலக்கு குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும். மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எஸ்.பி. ஸ்டாலின் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பொதுமக்கள் மதுவிலக்கு குற்றம் சம்மந்தமாக புகார் தெரிவிக்க இலவச உதவி எண் 10581 மற்றும் 8870490380 எண்ணிற்கும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தகவல் அளிப்போரின் ரகசியம் பாதுகாக்கப்படும்.
