தமிழகத்தின் இயற்கை அரணாக விளங்கும் நீலகிரி மாவட்டத்தில், தேயிலை மற்றும் மலைக் காய்கறி விவசாயமே மாவட்டத்தின் பொருளாதார முதுகெலும்பாகத் திகழ்ந்து வருகிறது. இத்தொழில்களைச் சார்ந்து சுமார் 60 சதவீத மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக விவசாயத் தொழில் படிப்படியாக நலிவடைந்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. போதிய ஆதார விலை இல்லாதது, அடிக்கடி ஏற்படும் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் தொடர் நஷ்டம் போன்ற காரணங்களால் விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றன. குறிப்பாக, நீலகிரியின் அடையாளமான தேயிலை விவசாயத்தைக் காக்க, கடந்த 25 ஆண்டுகளாக விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலைக்காக (MSP) நடத்திய பல்வேறு போராட்டங்கள் தோல்வியிலேயே முடிந்துள்ளன. இதனால் சுமார் 65 ஆயிரம் தேயிலை விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாவைத் தவிர்த்து வேறு மாற்றுத் தொழில்கள் இல்லாதது இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. படித்த இளைஞர்களுக்காக தகவல் தொழில்நுட்பப் பூங்கா (IT Park) அமைக்கும் திட்டம் கடந்த 30 ஆண்டுகளாக வெறும் காகித அளவிலேயே இருந்து வருகிறது. ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிகளில் ஐ.டி. பார்க் கொண்டுவர மாநில அரசு ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட போதிலும், அந்தத் திட்டங்கள் இன்னும் அறிவிப்போடு முடங்கிக் கிடப்பதால் இளைஞர்களிடையே கடும் ஏமாற்றம் மிஞ்சியுள்ளது. மாவட்டம் முழுவதும் ஒட்டுமொத்த வருவாய் ஆதாரம் சிதைந்து போனதன் விளைவாக, சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது சொந்த மண்ணை விட்டு நிரந்தரமாக வெளியேறி, சமவெளிப் பகுதிகளில் பணி நிமித்தமாகக் குடிபெயர்ந்துள்ளனர்.
இந்த மிகப்பெரிய அளவிலான இடப்பெயர்ச்சி அண்மையில் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சமவெளிப் பகுதிகளுக்குச் சென்றவர்களின் பெயர்கள் அவர்கள் தற்போது வசிக்கும் இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதால், நீலகிரி மாவட்டத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து மலை மாவட்ட விவசாய சங்க நிர்வாகி ராமன் கூறுகையில், “விவசாயத்தில் எதிர்காலம் இல்லை என்ற சூழல் நிலவுவதால், பிழைப்பு தேடி இளைஞர்கள் வெளியேறுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. மாநில அரசு அறிவித்த திட்டங்கள் எப்போது நிறைவேறும் என்று தெரியாத நிலையில், மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு இங்கு ஐ.டி. பார்க் போன்ற நவீன வேலைவாய்ப்புத் திட்டங்களைக் கொண்டு வர வேண்டும்” என உருக்கமாகத் தெரிவித்தார். வரும் தேர்தலுக்கு முன்னதாக, மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து நீலகிரி மக்களின் வாழ்வாதாரத்தை மீட்கும் ஆக்கப்பூர்வமான திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்பதே மாவட்ட மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

















