தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சுற்றுப்பயண அட்டவணை வெளியாகி, அக்கட்சி தொண்டர்களிடையே விவாதமாகியுள்ளது.
செப்டம்பர் 13 முதல் ஒவ்வொரு வாரமும் மக்களை சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் நாளிலேயே விஜய் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின் ஒவ்வொரு சனிக்கிழமையும் அவர் 2 அல்லது 3 மாவட்டங்களுக்கு பயணம் செய்யவுள்ளதாக தவெக அறிவித்துள்ளது.
ஆனால், மதுரை, கோவை, சேலம் போன்ற பெரிய மாவட்டங்களிலும் விஜய் ஒருநாள் முழுமையாக ஒதுக்காமல் இருப்பது, அக்கட்சி தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு முன் மக்கள் சந்திப்பு நேரடியாக நடைபெற வேண்டும்; ஒரே இடத்தில் உரையாற்றி விட்டு செல்லுவது வாக்குகளாக மாறாது எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மதுரை சுற்றுப்பயணத்திற்கு நான்கு நாட்கள் ஒதுக்கி, காலை-மாலை என பல்வேறு தொகுதிகளை சுற்றி, வணிகர்கள் மற்றும் தொழிலதிபர்களையும் சந்தித்தார். இதனால் அவர் மக்களிடம் நேரடி தொடர்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜய் ஒரே நாளில் மூன்று மாவட்டங்களில், அதுவும் கேரவனிலிருந்து ஒரே இடத்தில் உரையாற்றுவதாகத் திட்டமிடப்பட்டிருப்பது, “கேரவனிலிருந்தே அரசியல்” எனும் விமர்சனங்களை தூண்டும் என்று தவெக தொண்டர்களே கவலை தெரிவித்து வருகின்றனர்.
ரோடு ஷோ போன்று மக்கள் தொடர்பை அதிகரிக்க வேண்டும் என்பதே பெரும்பான்மை தொண்டர்களின் கோரிக்கையாக உள்ளது. இதனை தவெக மேலிடம் கருத்தில் கொள்ளுமா என்பது வருங்கால நடவடிக்கைகளில் தெளிவாகும்

















