சென்னை: ஆசிரியர்களின் பதவி பாதுகாப்பு மற்றும் நலனில் எந்தவிதத்திலும் குறை ஏற்படாத வகையில் தமிழக அரசு தொடர்ந்து செயல்படும் எனவும், TET தேர்வு விவகாரத்தில் ஆசிரியர்களை எந்த சூழ்நிலையிலும் திராவிட மாடல் அரசு கைவிடாது எனவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வு கட்டாயம் எழுத வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு கடந்த நாட்களாக சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு அரசு ஏற்கனவே சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இதனிடையே, நாடளாவிய அளவில் ஆசிரியர் சங்கங்களும் இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன.
இந்த சூழலில், பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் 55-க்கும் மேற்பட்ட ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று, ஆசிரியர்களிடையே நிலவும் அச்ச நிலை, பணிபாதுகாப்பு குறித்த கவலைகள் மற்றும் கோரிக்கைகளை அமைச்சர் முன் வைத்தனர். அரசு ஆசிரியர்களின் பதவிப் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்யப்படாது என்றும், சட்டப்படி அவர்களின் உரிமையை காப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தொடரப்படும் என்றும் அமைச்சர் அப்போது தெரிவித்தார்.
பின்னர், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக வழக்கறிஞரும் எம்.பி.யுமான வில்சனுடன் சேர்ந்து அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நிலைமையை விளக்கினார். 2011-ஆம் ஆண்டிற்கு முன்னர் பணியில் சேர்ந்திருந்தாலும் இப்போது தகுதித் தேர்வு கட்டாயப்படுத்தப்பட்டிருப்பது குறித்து ஆசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மனஅழுத்தம் மற்றும் சங்கங்கள் தெரிவித்த கருத்துகளை அவர் முதல்வரிடம் கூறினார். இதனை கவனித்த முதல்வர் ஸ்டாலின், ஆசிரியர்களின் நலனை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், அவர்கள் எந்தவித பாதிப்பும் சந்திக்காத வகையில் அரசு தொடர்ந்து முன்னெடுப்புகளை மேற்கொள்ளும் என்றும் உறுதி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விரைவில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை அமைச்சர் அன்பில் மகேஷ் சந்தித்து, தமிழ்நாட்டின் கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. TET தீர்ப்பைச் சுற்றி எழுந்துள்ள குழப்பத்தை தீர்க்கவும், ஆசிரியர்களுக்கு நிம்மதி அளிக்கவும் அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் கூறுகின்றன.
















