இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்றும், அதனை யாரும் புறக்கணிக்கக்கூடாது என்றும் பா.ஜ.க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தேசியக் கல்விக் கொள்கையின் மூலமாக இந்தியா முழுவதும் இந்தியை ஊக்குவிக்க முயற்சிக்கிறது என எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.
அதே நேரம், நாடாளுமன்ற மக்களவை தலைவர் ஓம் பிர்லா சமஸ்கிருதமே நாட்டின் மூலமொழி என அவையிலேயே தெரிவித்தது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி திணிப்பு குறித்து நாடு முழுவதும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. மாநிலங்களின் கூட்டுதான் இந்தியா என்பதால், ஒரே ஒரு தேசிய மொழி இல்லையென்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. அரசு அலுவலகங்களுக்கான அலுவல் மொழிகள் இந்தியியும் ஆங்கிலமும் தான் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், மே 7 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறிய இந்தியா, அதே நாளில் பாகிஸ்தானின் பல இடங்களில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
இந்தியாவின் தீவிரவாத எதிர்ப்பு நிலைப்பாட்டை சர்வதேசத்துக்கு விளக்கும் நோக்கில், இந்தியா சார்பில் எம்.பிக்கள் அடங்கிய தூதுக்குழு பல்வேறு நாடுகளை சுற்றுப்பயணம் செய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தி.மு.க எம்.பி. கனிமொழி உள்ளிட்ட பிரதிநிதிகள் ஸ்பெயின் சென்றுள்ளனர். ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில், அந்நாட்டு பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது, “இந்தியாவின் தேசிய மொழி எது?” என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு எம்.பி. கனிமொழி, “இந்தியாவின் தேசிய மொழி – வேற்றுமையில் ஒற்றுமை” என சுருக்கமாக பதிலளித்தார். அவரது பதில் அரங்கில் எழுச்சி ஏற்படுத்தியது. சில நிமிடங்களுக்கு அரங்கம் முழுவதும் கைதட்டலால் அதிர்ந்தது.