திருச்சி:
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆளுங்கட்சி இடையூறு செய்கிறது என்ற குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளார் அமைச்சர் கே.என்.நேரு.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, விஜய் தனது கட்சிக்கான முதல் தேர்தல் பிரச்சாரத்தை வரும் 13ஆம் தேதி திருச்சியில் தொடங்க உள்ளார். முதலில் சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மரக்கடை பகுதியில் நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்டிருந்தாலும், போக்குவரத்து நெரிசல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் காவல்துறை மறுத்தது. பின்னர், திருச்சி காந்திநகர் மார்க்கெட் பகுதியில் பிரச்சாரம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுக அரசு விஜயின் பிரச்சாரத்திற்கு இடையூறு செய்கிறது என்ற குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது :
“தவெகவுக்கு இடையூறு தந்து நாங்கள் என்ன செய்யப் போகிறோம் ? எந்தக் கட்சியாக இருந்தாலும் மக்களுக்கு இடையூறு ஏற்படாத இடத்தில்தான் காவல்துறை அனுமதி அளிக்கும். நாங்கள் இருந்த காலத்திலும் பல இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டதே உண்டு. அதிமுக ஆட்சி இருந்தபோது கூட எங்களுக்கு சிந்தாமணி அண்ணா சிலை உள்ளிட்ட இடங்களில் அனுமதி தரவில்லை.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு குறிப்பிட்ட இடங்கள் அரசியல் கூட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தற்போது விஜய்க்கு அனுமதி அளிக்கப்பட்ட காந்தி மார்க்கெட் பகுதியில் கடைசியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் கருணாநிதி தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது. நாங்கள் ஏன் விஜயின் பிரச்சாரத்துக்கு இடையூறு செய்ய வேண்டும்?” என அமைச்சர் கே.என்.நேரு கேள்வி எழுப்பினார்.

















