மலையாள சினிமாவில் உயர்ந்து வரும் திறமையான நடிகராக பெயர் பெற்றுள்ள ஷேன் நிகாம், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் “மெட்ராஸ்காரன்” திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப் படத்தில் கலையரசன், நிஹாரிகா மற்றும் ஐஸ்வர்யா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்நிலையில், ஷேன் நிகாமின் 25வது திரைப்படமாக உருவாகியுள்ள புதிய படம் “பல்டி”. இந்த படத்தை அறிமுக இயக்குநராக இருக்கும் உன்னி சிவலிங்கம் இயக்கியுள்ளார். கபடி விளையாட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், ஷேனுடன் சேர்ந்து ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் சாந்தனு பாக்கியராஜ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் சாய் அபயங்கர். இது அவரது முதல் மலையாள படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இப்படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டது. அதில் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால், சாய் அபயங்கருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஆடியோ பதிவு இடம்பெற்றுள்ளது.
“பல்டி” திரைப்படத்தை சந்தோஷ் குருவில்லா தயாரிக்கிறார். தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. வரும் ஒணம் பண்டிகையை முன்னிட்டு, திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.