நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள தெலுங்கு படம் ‘தி கேர்ல் ஃப்ரெண்ட்’ நவம்பர் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதன் பிரச்சார வேலைகளில் பிஸியாக இருக்கும் ராஷ்மிகா, சமீபத்தில் ஒரு புரமோஷன் பேட்டியில், வேலை நேரம் குறித்த தனது அனுபவத்தை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
“அதிக நேரம் வேலை செய்வது பெருமை அல்ல. நான் பல சமயங்களில் நீண்ட நேரம் வேலை செய்கிறேன், ஆனால் அதை மற்றவர்களுக்கு பரிந்துரைக்க மாட்டேன். மனித உடலுக்கும் மனதிற்கும் ஓய்வு அவசியம். 10 மணிநேரம் வேலை செய்தாலும், அதன் பிறகு குடும்பத்திற்கும் உடல்நலத்திற்கும் நேரம் ஒதுக்க வேண்டும்,” என அவர் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:
“நாங்கள் ஒரு திட்டத்தில் வேலை செய்யும்போது சில சமயம் அதே லொகேஷன் மீண்டும் கிடைக்காது, அதனால் ஒரே நாளில் பல காட்சிகளை முடிக்க வேண்டிய அவசரம் இருக்கும். அதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் அதற்காக தொடர்ந்து அதிக நேரம் வேலை செய்யும் நிலையை நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மீது திணிக்கக் கூடாது. எல்லோருக்கும் ஒரு நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரம் இருக்க வேண்டும்.”
“9 மணி முதல் 6 மணி வரை அலுவலகப் பணியாளர்கள் போல, நாங்களுக்கும் ஒரு வேலை நேரம் தேவை. எங்களுக்கும் குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும். நானும் ஆரோக்கியத்தை கவனிக்க, தூக்கம் எடுக்க, உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆனால் இப்போதைக்கு அது சாத்தியமாகவில்லை, ஏனெனில் நான் எனக்கே அதிக சுமைகளை ஏற்றுக் கொண்டிருக்கிறேன்,” என்று ராஷ்மிகா மனம் திறந்தார்.
சில நாட்களுக்கு முன், தி கேர்ல் ஃப்ரெண்ட் படத்தின் டிரெய்லர் வெளியீட்டில் தயாரிப்பாளர் எஸ்.கே.என் (ஸ்ரீனிவாஸ் குமார்) பேசிய போது, “எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வேலை செய்யும் ஒரே Pan-India நடிகை ராஷ்மிகா தான். அவர் வேலையை நேரத்தால் அல்ல, அன்பால் அளவிடுகிறார்,” என்று புகழ்ந்திருந்தார்.
இந்த பேச்சு, நடிகை தீபிகா படுகோனே சமீபத்தில் வேலை நேரம் குறித்து கூறிய கருத்துக்கு எதிரானதாக இருந்தது என சிலர் விமர்சித்தனர். இந்நிலையில், ராஷ்மிகா தெரிவித்துள்ள கருத்து, தீபிகாவின் நிலைப்பாட்டோடு ஒத்துபோகும் வகையில் அமைந்துள்ளது.
















