புதுக்கோட்டை :
புதுக்கோட்டையில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், 2017-18 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் ரூ.4.62 கோடி மதிப்பில் கட்டத் தொடங்கப்பட்ட பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கு, நிதி பற்றாக்குறையால் நடுவில் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அந்த இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
இந்த ஆய்வில் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் சேர்ந்து பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பணிகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டு, அதனை விரைவாக நிறைவு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தை முடிக்க தற்போது ரூ.4.5 கோடி தேவைப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் ரூ.3.5 கோடியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கீடு செய்துள்ளார். மீதமுள்ள ரூ.1 கோடி தொகையை சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியிலிருந்து பெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிந்து, விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்கு அரங்கம் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “நிதி உரிமையை கேட்பதற்காக முதலமைச்சர் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார். எதிர்க்கட்சி அரசியல் செய்வது இயல்பு. ஆனால் நாங்கள் எவருக்கும் பயப்படமாட்டோம். ஈடியா இருந்தாலும், மோடியா இருந்தாலும் எங்களுக்கு அச்சமில்லை. மிரட்டிகள் வந்தாலும், எங்களைக் கட்டுப்படுத்த முடியாது. திமுக ஒரு சுயமரியாதை கட்சி. பெரியாரின் கொள்கையை பின்பற்றும் கட்சி. தப்பு செய்யாதவர்கள் யாருக்கும் பயப்பட தேவையில்லை. எதையும் சட்டபூர்வமாகத்தான் எதிர்கொள்வோம்,” எனத் தெளிவுபடுத்தினார்.