மகாராஷ்டிரா மாநிலம் நாஷிக் மாவட்டத்தில் உள்ள போரிசிபறி கிராம மக்கள், குடிநீர் பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இக்கிராமத்தில் தினசரி நீர் தேவைக்காக பெண்கள் சுமார் 2.5 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று, ஆழமான கிணறுகளில் இறங்கி நீர் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
ஜல் ஜீவன் மிஷன் திட்டம் இங்கு முறையாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பெண்கள் தங்களது உயிரை பணயம் வைத்து கயிறுகள் உதவியுடன் கிணற்றுக்குள் இறங்கி நீரை எடுக்கின்றனர். இந்நிலையில் சிலர் 200 லிட்டர் குடிநீருக்காக ₹60 வரை செலுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
தண்ணீர் இல்லாததால் சில பெண்கள் திருமணத்தை மறுக்கும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது. இதுதவிர, யவத்மால் மாவட்டம் உள்ளிட்ட பிற பகுதிகளிலும் இதேபோன்று நீர் தட்டுப்பாடு தீவிரமாகவே உள்ளது.
இந்த நீர் நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நீர் மேலாண்மை திட்டங்களை விரைவாக செயல்படுத்தி மக்கள் துயரை துடைக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.