போர் பாதுகாப்பு ஒத்திகை முக்கிய இடங்களில் தொடரும் : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை : தமிழகத்தின் முக்கிய இடங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை தொடர்ந்து நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையின் அடிப்படையில், கடந்த மே 7ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள துறைமுகங்கள், அணுமின் நிலையங்கள், விமான நிலையங்கள், அனல்மின் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் போர் பாதுகாப்பு ஒத்திகைகள் தொடங்கியுள்ளன.

இந்த ஒத்திகையின் ஒரு பகுதியாக, கடந்த நாட்களில் தூத்துக்குடி துறைமுகம் மற்றும் அனல்மின் நிலையங்களில் விமான தாக்குதல்களை எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை பயிற்சி நடைபெற்றது. இதில் பாதுகாப்பு நடவடிக்கைகள், அவசர கால வெளியேற்றம் மற்றும் முதலுதவி குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள போதிலும், தமிழகத்தில் முக்கிய இடங்களில் இந்த பாதுகாப்பு ஒத்திகை தொடரும் என அரசு அறிவித்துள்ளது.

அடுத்த வாரம், தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகைகள் நடைபெறவுள்ளன. வாரத்தின் இரண்டாம் பாதியில், சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் தேர்ந்தெடுத்த பகுதிகளில் நேரடி ஒத்திகை பயிற்சி நடத்தப்படவுள்ளது.

இந்த பயிற்சிகளை மாநில மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் ஒருங்கிணைத்து நடத்துகின்றன. முக்கிய இடங்களில் ஆயத்த நிலையை மதிப்பீடு செய்வதற்கான இந்த ஒத்திகை மட்டுமே நடைபெறுகிறது. பிற பகுதிகளில் அனைத்து செயல்பாடுகளும் வழக்கம் போல் நடைபெறும்.

இதற்காக பொதுமக்கள் எந்தவித பதற்றமடைய தேவையில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version