வோடபோன் ஐடியா நிறுவனத்தின் பங்கு விலை ஒரே நாளில் 10% வரை சரிந்துள்ளது. அரசின் கூடுதல் நிவாரண அறிவிப்பு எதுவும் பரிசீலனையில் இல்லை எனத் தெளிவுபடுத்தியதை அடுத்து இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வோடபோன் நிறுவனத்திற்கு இது முதலீட்டாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட சலுகைகளைத் தாண்டி புதிய சலுகைகள் எதுவும் இல்லை என அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா நிறுவனத்தின் பங்கு விலை இன்று ஒரே நாளில் 10 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளன. மொத்த வருவாய் (AGR) நிலுவைத் தொகை தொடர்பாக கூடுதல் நிவாரணம் எதுவும் பரிசீலிக்கப்படவில்லை என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியதை அடுத்து, செவ்வாய்க்கிழமையான இன்று பங்கு விலை கிடுகிடுவென சரிந்தது. அதாவது பிஎஸ்இ சந்தையில் வோடபோன் ஐடியாவின் பங்கு விலை 10% சரிந்து ரூ.6.66 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
வோடபோன் நிறுவனம் பெரும் கடன் நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பு முதலீட்டாளர்களை பெரும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.
தொலைத்தொடர்புத் துறைக்கு ஏற்கனவே வழங்கப்படும் சலுகைகளை தாண்டி எந்தவிதமான புதிய சலுகைகளும் வழங்க திட்டம் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. வோடபோன் ஐடியாவின் நிலுவைத் தொகையில் கணிசமான பகுதியை அரசாங்கம் ஏற்கனவே ஈக்விட்டியாக மாற்றியுள்ளதாகவும், இது தொடர்பாக மேலும் மாற்றங்களுக்கான விவாதங்கள் அல்லது திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் தகவல் தொடர்புத் துறையின் இணை அமைச்சர் சந்திர சேகர் பெம்மாசானி தெரிவித்தார்.
மார்ச் மாதத்திலிருந்து நிலுவையில் உள்ள ஸ்பெக்ட்ரம் நிலுவைத் தொகைக்கு பதிலாக ரூ.36,950 கோடி பங்கு மாற்றத்தைத் தொடர்ந்து வோடபோன் ஐடியாவின் மிகப்பெரிய பங்குதாரராக மத்திய அரசு மாறியது. 2023 ஆம் ஆண்டில் இதேபோன்ற நடவடிக்கையை எடுத்து, ரூ.16,000 கோடி மதிப்புள்ள நிலுவைத் தொகைக்கு எதிராக சுமார் 33% பங்குகளை வாங்கியது.
இந்த நடவடிக்கைகள் இருந்தபோதிலும், அரசாங்க ஆதரவு இல்லாமல் வோடபோன் நிறுவனம் கடனிலிருந்து மீள்வது சிரமம் ஆகும்.
2025ம் ஆண்டு ஜூன் காலாண்டின் இறுதியில் வோடபோன் ஐடியாவின் AGR பொறுப்பு தோராயமாக ரூ.75,000 கோடியாக இருந்தது. தொலைத்தொடர்பு நிறுவனம், பாரதி ஏர்டெல், BSNL மற்றும் MTNL போன்ற நிறுவனங்களுடன் சேர்ந்து, கடந்த காலத்தில் DoT இன் AGR வரையறையை சவால் செய்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் 2019ம் ஆண்டு அக்டோபர் தீர்ப்பு துறையின் விளக்கத்தை உறுதிசெய்து நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்த உத்தரவிட்டது.
2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி தடைக்காலம் முடிவடைந்த பிறகு, நிறுவனம் ஆறு சம தவணைகளில் இந்தப் பொறுப்பைத் திருப்பிச் செலுத்தத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அதன் பணப்புழக்கம் மற்றும் நிதி திரட்டும் திட்டங்கள் குறித்த முதலீட்டாளர்களின் கவலைகளை அதிகரிக்கிறது.
தனித்தனியாக, ஸ்டார்லிங்க் மற்றும் யூடெல்சாட் ஒன்வெப் உள்ளிட்ட உலகளாவிய மற்றும் உள்நாட்டு நிறுவனங்களால் பரிசீலிக்கப்படும் செயற்கைக்கோள் தொடர்பு (சாட்காம்) சேவைகளுக்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த கேள்விகளுக்கும் அமைச்சர் பதிலளித்தார்.
திங்களன்று பிஎஸ்இ சந்தையில் வோடபோன் ஐடியாவின் பங்குகள் 4.7% உயர்ந்து ரூ.7.40 ஆக முடிவடைந்தது. இந்த நிலையில் பங்கு விலை இன்று 10 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.












