காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என ஒற்றை கோரிக்கை முன்வைத்து கிராம உதவியாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் உள்ள கிராம உதவியாளர்கள் தங்களுக்கு “D Grade” காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி காலவரையின்றி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முதல் அனைத்து மாவட்ட தலைநகர் வட்ட அளவில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். “தங்களது கோரிக்கைகளை அரசு கண்மூடித்தனமாக புறக்கணிக்கிறது” என்பதை சுட்டிக்காட்டும் வகையில் இந்த முறையில் போராட்டம் நடத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.கோரிக்கையை அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். தீர்வு கிடைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று கூறினர்.கிராம உதவியாளர்கள் தெரிவித்ததாவது, பல ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகிறோம். அரசின் பல்வேறு திட்டங்களை கிராம மக்களிடம் கொண்டு சேர்க்க முக்கிய பங்கு வகித்தாலும், எங்களுக்கு உரிய ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர். அரசு கூடிய விரைவில் தங்களது கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
