சென்னை: கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான துயரச் சம்பவம் தொடர்பாக தமிழக சட்டசபையில் இன்று முக்கியமான விவாதம் நடைபெற்றது.
இந்த விவகாரம் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக விளக்கம் அளித்தார்.
முதல்வர் தெரிவித்ததாவது :
“கரூர் துயரச் சம்பவம் முழு தமிழகம் மக்களின் மனதையும் உலுக்கியது. உயிரிழந்தோருக்கு எனது ஆழ்ந்த அஞ்சலியும், அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவத்திற்குப் பிறகு அரசு உடனடியாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது,
“வேலுச்சாமிபுரத்தில் தவெக கூட்டத்திற்கு 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. போலீசார், அதிகாரிகள் என 600க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் இருந்தனர். அரசியல் கூட்டங்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் பாதுகாப்பை விட அதிகமாகவே ஏற்பாடு செய்யப்பட்டது.”
“கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தவெக அமைப்பு செய்யவில்லை. குடிநீர், உணவு, கழிப்பிடம் உள்ளிட்ட ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. பெண்களுக்கு கூட வெளியில் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டது. இதனால் பல மணி நேரம் காத்திருந்த மக்கள் பரபரப்பாக நெரிசலுக்குள்ளாகினர்.”
முதல்வர் மேலும் தெரிவித்தார்,
“மக்கள் சிக்கியபோது மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்தன. அதற்காக வந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் மீது சில தவெகவினர் தாக்குதல் நடத்தினர். கூட்டம் நடந்த இடத்திலே மின்சாரம் பயன்படுத்திய ஜெனரேட்டர் இருந்தது. மின்சாரம் தாக்கும் அபாயம் இருந்ததால், ஆபரேட்டர் மின்சாரத்தை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது,” என்றார்.
மேலும்,
“அதே இடத்தில் 2 நாட்களுக்கு முன்பு அதிமுக கூட்டம் நடைபெற்றது. அப்போது மக்கள் ஒழுங்காக கூடி அமைதியாக சென்றனர். ஆனால், தவெக கூட்டத்தில் அவ்வாறு நடைபெறவில்லை. முக்கியமாக, தவெக தலைவர் விஜய் கூட்டத்திற்கு சுமார் 7 மணி நேரம் தாமதமாக வந்தது தான் பெரும் நெரிசலுக்கும் குழப்பத்திற்கும் காரணமாகியுள்ளது,” என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம் அளித்தார்.