ரஜினிகாந்த் – நெல்சன் திலீப்குமார் இணைவில் உருவாகி வரும் பெரும் படைப்பு ‘ஜெயிலர் 2’ மீது கோலீவுட்டில் எதிர்பார்ப்பு சூழல் அதிகரித்துள்ளது. சென்னை, கேரளா, மைசூர் போன்ற பல பகுதிகளில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு பெரும்பாலான பாகங்கள் முடிந்த நிலையில், தற்போது கோவாவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
முதன்மை நட்சத்திர பட்டியலில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார் ஆகியோரின் பங்கேற்பு உறுதியாக இருந்தாலும், மற்ற கதாபாத்திரங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. அதுவும் போக, எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு, என்.பி. பாலகிருஷ்ணா, மிதுன் சக்ரபர்தி, வித்யா பாலன், மேக்னா ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர் என்ற தகவல்கள் தொழில்துறையில் பரவி வருகின்றன.
முதல் பாகத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த மோகன்லால் மற்றும் ஜாக்கி ஷெராஃப் இந்த தொடர்ச்சிப் படத்திலும் மீண்டும் நடிப்பார்களா என்பதில் இதுவரை உறுதி இல்லை.
இந்த சூழலில், தற்போது ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது, விஜய் சேதுபதி ‘ஜெயிலர் 2’வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற பேசுபொருள்! அவர் தற்போது ஒப்பந்தமான படங்களின் இடைவேளையில் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் என்றும், இதில் வில்லன் குழுவில் முக்கியமான ஒருவராக விஜய் சேதுபதி நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.
சமீபத்தில், சிம்பு நடிக்கும் வெற்றிமாறன் இயக்கும் ‘அரசன்’ படத்திலும் விஜய் சேதுபதி இணைந்திருப்பது அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் வந்து நிற்கும் ‘ஜெயிலர் 2’ பற்றிய தகவல்கள், அவரது கதாபாத்திரத்தை மேலும் சுவாரஸ்யமாக மாற்றி இருக்கிறது.
2023 ஆம் ஆண்டு வெளியான மிகப்பெரிய வெற்றி படமான ‘ஜெய்லரின் தொடர்ச்சியாக உருவாகும் இந்தத் திரைப்படத்தில், ரஜினிகாந்த் மீண்டும் ‘டைகர்’ முத்துவேல் பாண்டியன் வேடத்தில் திரும்ப வருகிறார். முதல் பாகத்தில் பல நடிகர்களின் கேமியோ தோற்றங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றதைப் போல, இந்த தொடர்ச்சியிலும் பல முக்கிய நட்சத்திரங்கள் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
‘ஜெயிலர் 2’ உலகளாவிய அளவில் ஜூன் 12, 2026 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
