தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ள சூழலில், கரூர் வேலுசாமிபுரம் பகுதியில் மத்திய தடய அறிவியல் ஆய்வகக் குழுவினர் (CFSL) இன்று தீவிர ஆய்வுகளை மேற்கொண்டனர். கடந்த 2024 செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட மிக மோசமான கூட்ட நெரிசலில் சிக்கி, 41 அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ இந்த வழக்கைத் கையில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்தக் கொடூர விபத்து குறித்து ஏற்கனவே 200-க்கும் மேற்பட்டோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது. குறிப்பாக, டிசம்பர் மாத தொடக்கத்தில் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மேற்பார்வைக் குழு அதிகாரிகள் ஏடிஜிபி சோனல் வி.மிஸ்ரா மற்றும் சுமித் சரண் ஆகியோர் கரூரில் முகாமிட்டு, பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் பொதுமக்களிடம் நேரடி மனுக்களைப் பெற்றனர். இதனைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் மற்றும் எஸ்.பி. ஜோஷ் தங்கையா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் ஆனந்த், சி.டி. நிர்மல்குமார் ஆகியோரிடம் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் வைத்து கடந்த டிசம்பர் இறுதியில் மூன்று நாட்கள் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், வழக்கின் அடுத்தக்கட்ட நடவடிக்கையாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய், வரும் ஜனவரி 12-ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர் ஆஜராவதற்கு முன்னதாக, இன்று (ஜனவரி 9) காலை 11 மணி முதல் மத்திய உள்துறை அமைச்சரகத்தின் மூத்த அதிகாரி தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட மத்திய தடயவியல் நிபுணர்கள், விபத்து நடந்த வேலுசாமிபுரம் மைதானத்தில் அறிவியல் ரீதியான ஆய்வுகளை மேற்கொண்டனர். மேடை அமைப்பு, மக்கள் நுழைந்த மற்றும் வெளியேறிய வழிகள், பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து சிபிஐ அதிகாரிகளுடன் இணைந்து இக்குழுவினர் விரிவான வரைபடங்களைத் தயாரித்துச் சென்றனர்.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் ஏற்கனவே இங்கு ஆய்வு செய்துள்ள நிலையில், தற்போது மத்திய தடயவியல் குழுவின் ஆய்வறிக்கை இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் தலைவர் என்ற முறையில் விஜய்க்கு அனுப்பப்பட்டுள்ள இந்தச் சம்மன், தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை வளையத்திற்குள் கட்சித் தலைமையும், மாவட்ட நிர்வாகமும் கொண்டு வரப்பட்டுள்ளதால், இந்த வழக்கின் இறுதி அறிக்கை எத்தகைய திருப்பங்களைக் கொண்டு வரும் என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு யூகங்கள் நிலவி வருகின்றன.
















