அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் இடையே ரகசிய அரசியல் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வருகிறது.
அதிமுக–பாஜக கூட்டணியில் தற்போது புதிய மாற்றங்கள் உருவாகி வருவதாகவும், அதில் முக்கிய பங்கு வகிக்கப்போகிறவர் விஜய்யே எனவும் தகவல்கள் கூறுகின்றன.
பாஜக தரப்பிலிருந்தும் அணுகல்
விஜய்யுடன் கடந்த இரண்டு நாட்களாக பாஜகவின் முக்கிய தலைவர்கள் சிலர் நேரடியாகவும், தொலைபேசி வழியாகவும் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
மொத்தத்தில், தமிழக வெற்றிக் கழகம், அதிமுக, பாஜக — இந்த மூன்று கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டணியை அமைப்பது குறித்து ஆரம்ப நிலை ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விஜய்க்கு 40+ இடங்கள், துணை முதல்வர் சலுகை ?
அரசியல் வட்டாரங்களில் பரவும் தகவலின்படி, எடப்பாடி பழனிசாமி, விஜய்யின் கட்சிக்கு சுமார் 40க்கும் மேற்பட்ட தொகுதிகள் வழங்கவும், அதோடு துணை முதல்வர் பதவி அளிக்கும் வாய்ப்பு குறித்தும் விவாதித்து வருவதாக கூறப்படுகிறது. 100 இடங்கள் போன்ற கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது என்றும், “முதல்வர் வேட்பாளர் எடப்பாடிதான்” என்பது பாஜக-அதிமுக தரப்பில் ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட நிலைப்பாடாகும்.
விஜய்–எடப்பாடி தொலைபேசி உரையாடல்
சமீபத்தில் இருவரும் அரை மணி நேரத்திற்கும் மேலாக தொலைபேசியில் பேசிக்கொண்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அந்த உரையாடலில், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர, கூட்டணியாக இணைந்து செயல்படுவது குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியதாக தகவல்.
இதற்கு விஜய் நேரடியாக மறுப்பு கூறாமல், “நான் விரைவில் மக்களை சந்திக்கப் போகிறேன். பிரச்சாரம் தொடங்கும் பிறகு, ஜனவரி அல்லது பொங்கல் காலத்திற்குப் பிறகு முடிவு எடுப்பேன்,” என்று பதிலளித்ததாக கூறப்படுகிறது.
கரூர் சம்பவம் பற்றிய இரங்கல்
அதே உரையாடலில், கரூர் சம்பவம் குறித்து எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட முறையில் விஜயிடம் இரங்கலைத் தெரிவித்ததாகவும், “உங்கள் கட்சிக்கு முழு ஆதரவு கொடுக்கிறேன்” என்று உறுதியளித்ததாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் சூழல் சூடாகிறது
ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஆகியோர் வெளியேறியதால் கூட்டணியின் வலிமை குறைந்த நிலையில், விஜய்யின் தமிழ்நாடு வெற்றிக் கழகம் சேருமா என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரங்களில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. விஜய் தன்னுடைய அடுத்தடுத்த பிரச்சாரங்கள் மற்றும் மக்களை சந்திக்கும் திட்டங்களை முடித்து விட்டு தான் இறுதி முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

















