திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான பணியை மாவட்ட ஆட்சியர் பிரதாப் திருவள்ளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.
திருவள்ளுர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தண்டலம் ஊராட்சியில் 600- க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த கிராமமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லக் கூடியவர்கள் எல்லாம் கூவம் ஆற்றை கடந்து கடம்பத்தூர் வழியாக சென்று வருகின்றனர். இந்த நிலையில் பருவமழையின் போது கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் தண்டலம் கிராமத்தை சேர்ந்த மக்கள் பிஞ்சிவாக்கம், அகரம் வழியாக 8 கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு கடம்பத்தூர் பகுதிக்கு வரும் நிலை இருந்து வருகிறது, இதனை தொடர்ந்து கிராமமக்கள் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரனிடம் கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் முயற்சியால் கூவம் ஆற்றின் குறுக்கே தண்டலம் – கசவநல்லாத்தூர் இடையே ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.17, கோடியே 20,லட்சம் மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கப்பட்டு மேம்பாலம் கட்டும் பணி தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்று. இதில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் மற்றும் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் அடிக்கல் வைத்து கட்டுமான பணியை தொடங்கி வைத்தனர். இதனால் தண்டலம் கிராமமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சித் துறையை சேர்ந்த அதிகாரிகள், செயற்பொறியாளர்கள், திமுக நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
