வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பதவியேற்றதிலிருந்து டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். “அமெரிக்க நலன்களுக்கு முன்னுரிமை” என்ற வாக்குறுதியின் பேரில், உலக நாடுகளுடன் பரஸ்பர வரிகளை விதித்து சர்வதேச சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்கா தற்போது இந்த பரஸ்பர வரிகளை 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவெடுத்துள்ளது. இதற்கிடையில், இந்த வரி நிறுத்தப்பட்ட நாடுகளுக்கான அடிப்படை வரி 10% ஆக விதிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் இரும்பு, உருக்கு மற்றும் வாகன உதிரி பாகங்கள் ஆகியவற்றுக்கு கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, இந்தியா சார்பாக என்ஜினீயரிங் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (EEPC) கடும் கவலை தெரிவித்துள்ளது.
“இந்த அமெரிக்க நடவடிக்கையால், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு எக்ஸ்போர்ட் செய்யப்படும் இன்ஜினீயரிங் பொருட்கள் பெரிதும் பாதிக்கப்படும்,” என கவுன்சில் தெரிவித்துள்ளது. மேலும், இது ஒரு ஆண்டுக்கு 400 கோடி டாலர் முதல் 500 கோடி டாலர் வரையிலான ஏற்றுமதி இழப்பை ஏற்படுத்தும் என கணிக்கப்படுகிறது.
இந்த வரி நிலை தொடர்ந்து அமலாக்கப்படின், இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளின் வர்த்தக வளர்ச்சி சவாலுக்கு உள்ளாகும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.