தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஒவ்வொரு ஆண்டும் தேசிய சாலை பாதுகாப்பு மாதமானது ஜனவரி 1ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும், சாலை பயணத்தின் போது செல்போன் பயன்படுத்தக் கூடாது, சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த பேரணியை திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்தப் பேரணியானது திருவாரூர் புதிய ரயில் நிலையத்தில் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக சென்று திருவாரூர் புதிய பேருந்து நிலையம், விளமல், கூட்டுறவு நகர் வழியாகச் சென்று ஆயுதப்படை மைதானத்தில் நிறைவடைந்தது. முன்னதாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த நடமாடும் கண்காட்சி அரங்கினை திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து கேட்டறிந்தார்.

















