நாகை அருகே மூடப்படாத தண்ணீர் தொட்டியில் விழுந்த இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு:சிக்கல் பத்து கிராமத்தில் தாத்தா வீட்டிற்கு வந்தபோது நிகழ்ந்த விபத்து அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் கீழக்கரையிருப்பு ஆவராணி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கலைவாணன். இவரது மகன் பிரவீன்சாய்,கலைவாணன் உறவினர் அதே பகுதியை சேர்ந்தவர் சாமிதுரை மகன் பவன்சாய், இந்த இரண்டு நான்கு வயது உடைய சிறுவர்களும் நாகை அருகே சிக்கல் பத்து பகுதியில் வசிக்கும் அவரது தாத்தா பாரதி மோகன் வீட்டிற்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பள்ளி விடுமுறைக்கு சென்றனர். இந்நிலையில் நேற்று மாலை வீட்டை விட்டு வெளியே விளையாட சென்றனர். நீண்ட நேரமாகியும் இரண்டு சிறுவர்களையும் காணவில்லை. இதையடுத்து உறவினர்கள் தேடிப் பார்த்தனர். அப்போது பாரதி மோகனின் வீட்டிற்கு அருகில் புதிதாக வீடு கட்டி வரும் செல்லம்மாள் வீட்டில் தண்ணீர் தேக்குவதற்காக தரையில் கட்டப்பட்டுள்ள மூடப்படாத தண்னீர் தொட்டியில் விழுந்து இறந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து இரண்டு சிறுவர்கள் உடலையும் கைப்பற்றி பரிசோதனைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
