சென்னை:
சிவானந்தா சாலையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுச் சொத்துகள் சேதமடைந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அவை உடனடியாக சரிசெய்ய தாங்களே முன்வருவதாக தமிழக வெற்றி கழகம் (தவெக) அறிவித்துள்ளது.
திருப்புவனம் கோவிலில் காவலாளி அஜித்குமார் உட்பட கடந்த நான்கு ஆண்டுகளில் விசாரணைக்குட்பட்ட நிலையில் உயிரிழந்த 24 பேருக்கான நீதி கோரி தவெக சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த பேரணியில், காவல் மரணங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் மேடையில் பங்கேற்றனர்.
“சாரி வேண்டாம்.. நீதி வேண்டும்” என்ற வாசகத்துடன் கருப்பு உடையில் மேடையில் நின்ற விஜய், தனது கண்டன உரையால் கவனம் ஈர்த்தார். கூட்டம் அதிகமானதால், தொண்டர்கள் தடுக்கப்பட்ட பகுதிகளில் கம்பிகளை மீறி முன்னேற முயன்றபோது, சில தடுப்பு கம்பிகள் சாய்ந்தும், சேதமடைந்தும் இருந்தது.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், ஆர்ப்பாட்டத்தின்போது சேதமடைந்த தடுப்பு கம்பிகளை தவெக சார்பாக சரிசெய்து தரத் தயார் எனவும், அதற்கான அனுமதி அளிக்க வேண்டியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தவெக மாவட்டச் செயலாளர் வேல்முருகன் (அப்புனு) எழுதியுள்ள அந்த கடிதம், ராயபுரம் மண்டல உதவி பொறியாளர் அலுவலகத்துக்குத் தக்க முறையில் அனுப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, சேதமடைந்த தடுப்பு கம்பிகளை அப்புறப்படுத்தியுள்ளனர். மேலும், இந்த சம்பவம், ஆர்ப்பாட்டத்திற்கு முன்பே காவல்துறையால் விதிக்கப்பட்ட பொதுச் சொத்துகள் பாதுகாப்பு நிபந்தனைகளை மீறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெகவின் இந்த நடவடிக்கை, ஆர்ப்பாட்டங்களுக்கு பிறகும் பொறுப்புடன் நடக்கவேண்டும் என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டு எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.