தவெக போராட்டம் எதிரொலி – உடனடியாக சாலையை சீரமைத்த அதிகாரிகள் – தமிழக வெற்றி கழகத்தினரை பாராட்டிய பொதுமக்கள்….
திருவாரூர் அருகே சேந்தமங்கலம் பகுதியில் கடுமையாக சேதம் அடைந்திருந்த சாலையை சீரமைக்க கோரி பலமுறை பல்வேறு அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், இன்று பள்ளி முடிந்து குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீடு திரும்பிய பெண்மணி சாலையில் தவறி விழுந்து காயம் அடைந்தார். இதனால் வெகுண்டெழுந்த தமிழக வெற்றிக்கழகத்தினர் உடனடியாக சாலையை சீரமைக்க வலியுறுத்தி பேருந்தை சாலையின் குறுக்கே நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருவாரூர் – மயிலாடுதுறை சாலையில் இருபுறமும் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சாலை மறியல் போராட்டத்தையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் தமிழக வெற்றி கழக நிர்வாகிகளிடம் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தமிழக வெற்றிக்கழக நிர்வாகத்தினர் தங்களது சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலையை செப்பணிடும் பணியை தொடங்கி செய்து வருகின்றனர்.பல மாதங்களாக குண்டும் குழியுமாக இருந்த சாலையில் பல அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தினமும் சென்று வந்த போதும் யாரும் கண்டுகொள்ளாத நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தினர் இன்று நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் உடனடியாக சாலை சீரமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக அப்பகுதி மக்கள் தமிழக வெற்றி கழகத்தினருக்கு தங்களது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.
















