திருச்சி :
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் தனது பிரச்சாரப் பயணத்தை வரும் செப்டம்பர் 13ஆம் தேதி தொடங்க உள்ளார். இந்தப் பயணம் திருச்சியில் துவங்கி, டிசம்பர் 20ஆம் தேதி மதுரையில் நிறைவு பெற உள்ளது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் பிரச்சாரத் தொடக்க நிகழ்வை நடத்த தவெக சார்பில் காவல்துறைக்கு விண்ணப்பம் அளிக்கப்பட்டது. எனினும், அந்த இடம் பொதுமக்கள் நெரிசல் மற்றும் போக்குவரத்து சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால், அதற்கு மாற்றாக காந்தி மார்க்கெட் மற்றும் மரக்கடை பகுதிகளைத் தேர்வு செய்யுமாறு காவல்துறை அறிவுறுத்தியது.
இதையடுத்து, தற்போது திருச்சி காந்தி மார்க்கெட், மரக்கடை பகுதிகளில் விஜய் பிரச்சாரம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதன் பேரில், வரும் 13ஆம் தேதி விஜய் தனது முதல் பொதுக்கூட்டப் பிரச்சாரத்தை அங்குதான் துவக்குகிறார்.
இந்நிலையில், அனுமதியோடு பல்வேறு கட்டுப்பாடுகளையும் காவல்துறை விதித்துள்ளது. அதன்படி, விஜய் ரோட் ஷோ நடத்தக்கூடாது, அதிக அளவிலான வாகனங்கள் அவரது பிரச்சாரக் கூட்டத்தை பின்தொடரக்கூடாது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
















