இந்துக்களுக்கு எதிரான அரசாங்கமாக த.வெ.க அரசு இருக்கிறது என திருவாரூரில் இந்து முன்னணி மாநில பொது செயலாளர் முருகானந்தம் பேட்டி
திருவாரூரில் இந்து முன்னணி மாநில பொது செயலாளர் முருகானந்தம் தலைமையில் மாவட்ட செயற்குழு கூட்டம் தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இந்து முன்னணி மாநில பொது செயலாளர் முருகானந்தம் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில்…
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று இரண்டு முறை நீதிபதி தீர்ப்பு கூறியிருக்கிறார். ஆனால் அப்போது இருந்த அந்த திமுக அரசாங்கம் இந்துக்களுக்கு விரோதமான அரசாங்கமாக இருந்ததனால் அங்குள்ள அதிகாரிகளை வைத்து அந்த தீபத்தை ஏற்ற விடாமல் செய்து விட்டார்கள். அமைச்சர் நிர்மல் குமார் பழைய நிலையை தொடரும். திமுக அரசாங்கம் என்ன செய்ததோ நாங்களும் அதே செய்வோம் என்று கூறுகிறார். தவெக அரசு இந்துக்களுக்கு விரோதமான அரசாங்கமாக கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.
எல்லாருக்கும் பொதுவான அரசாங்கம் என்று ஸ்டாலின் சொன்னார். ஆனால் அவர் பொதுவாக நடத்திக் கொள்ளவில்லை. ஜோசப் விஜயும் பொதுவான அரசாங்கம் என்று சொல்கிறார். ஆனால் இவரும் திமுகவை போல் தான் செய்கிறார்.
அமைச்சர் பொட்டு வைக்க கூடாது, நூல் கட்ட கூடாது, மத அடையாளங்கள் எதுவும் கூடாது என்று கூறுகிறார். ஆனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் ஹிஜாப் அணிந்து செல்கிறார்கள் அதை அணிய வேண்டாம் என்று சொல்லலாமே என்றும், மேலும் இதேபோல இந்த அரசாங்கம் இந்துக்களுக்கு எதிராக நடந்து கொண்டால் காலப்போக்கில் மக்கள் இந்த அரசாங்கத்தை தூக்கி எறிய கூடிய நிலை வரும். இந்த அரசாங்கம் பொதுவான அரசாங்கமாக இருப்பது எப்படி என்பதை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
பேட்டி : முருகானந்தம் – இந்து முன்னணி மாநில பொது செயலாளர்
