சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள தேவூர் பகுதியில், பழுதடைந்த சாலையைச் சீரமைக்கக் கோரி பள்ளி மாணவ-மாணவிகளுடன் பொதுமக்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாகத் தார் சாலை காணாத கிராம மக்களின் இந்தப் போராட்டம், அதிகாரிகளின் உறுதிமொழியைத் தொடர்ந்து தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.
எடப்பாடி அடுத்த தேவூர் புள்ளாக்கவுண்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மேல்புதூர் கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் தினசரி கூலி வேலைக்குச் செல்லும் விவசாயத் தொழிலாளர்கள் ஆவர். இவர்களின் பிரதான போக்குவரத்துப் பாதையான வடக்குகாடு பேருந்து நிறுத்தத்தில் இருந்து மேல்புதூர் கிராமம் வரையிலான 2 கிலோமீட்டர் சாலை, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலையாக அமைக்கப்பட்டது. அதன் பிறகு முறையான பராமரிப்பு இல்லாததால், தற்போது அந்தச் சாலை முற்றிலும் சிதிலமடைந்து ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கிறது.
குறிப்பாக மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மாறும் இந்தச் சாலையில், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகளை அவசர சிகிச்சைக்கு அழைத்துச் செல்லக் கூட ஆம்புலன்ஸ் வர மறுப்பதாகக் கிராம மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும், பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைவதும் தொடர்கதையாகி உள்ளது. இது குறித்துப் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடமும், அதிகாரிகளிடமும் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த மக்கள் போராட்டக் களத்தில் குதித்தனர்.
நேற்று காலை மேல்புதூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் குழந்தைகளுடன் குமாரபாளையம் – எடப்பாடி பிரதான சாலையில் உள்ள வடக்குகாடு பகுதியில் திரண்டனர். திடீரென அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. தகவலறிந்து வந்த தேவூர் போலீசார் மற்றும் சங்ககிரி வட்டார வளர்ச்சி அலுவலர் (பி.டி.ஓ) முத்துசாமி ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். “இன்னும் ஒரு மாத காலத்திற்குள் புதிய சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும்” என பி.டி.ஓ உறுதி அளித்ததைத் தொடர்ந்து, சுமார் 2 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர். அதிகாரிகளின் இந்த உறுதிமொழி காலக்கெடுவுக்குள் நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்தகட்டமாகப் பெரும் போராட்டம் நடத்தப்படும் என கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.
















