ஜேசன் சஞ்சய் இயக்கும் பட தலைப்பு அறிவிப்பு !

நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் திரைப்படத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக ‘சிக்மா’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில், சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். இதன் இசையை தமன் அமைக்க, ஜேசன் சஞ்சயும் இணை தயாரிப்பாளராக செயல்படுகிறார். இப்படம் 2026ம் ஆண்டு திரைக்கு வர உள்ளது.

2023ல் லைகா நிறுவனம் ஜேசன் சஞ்சய் தனது அறிமுக படத்தை இயக்குவதாக அறிவித்தது. அதன் பின்னர், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய தினம் லைகா தயாரிப்பு நிறுவனம், இப்படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக ‘சிக்மா’ என அறிவித்துள்ளது. மேலும், ஜேசன் சஞ்சய் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘JSJ மீடியா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ என்ற பெயரில் இணை தயாரிப்பாளராக இணைந்திருப்பதும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

படத்தைப் பற்றி இயக்குனர் ஜேசன் சஞ்சய் கூறியதாவது:

“‘சிக்மா’ என்பது பயமில்லாத, சுதந்திரமாக சிந்திக்கும் ஒருவனின் பயணத்தைப் பேசும் கதை. சமூகம் முழுமையாக புரிந்து கொள்ளாத ஒரு மனிதன் தனது இலக்குகளை நோக்கி நகர்வது இப்படத்தின் மையக் கருத்து. வேட்டை, கொள்ளை, நகைச்சுவை ஆகியவற்றை ஒருங்கே இணைக்கும் பரபரப்பான சினிமா அனுபவமாக ‘சிக்மா’ அமையும். இன்னும் ஒரு பாடல் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது; அதன் பின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும்,” என்று தெரிவித்தார்.

ஜேசன் சஞ்சயின் இயக்குநர் அறிமுகத்துக்கு ரசிகர்கள் உற்சாகம் தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version