மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் ஷாரூக் கான், ஆமீர் கான், சல்மான் கான். இம்மூவரும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என்பது சினிமா ரசிகர்களின் பல ஆண்டுகால கனவு. அந்த கனவு நனவாகப் போகிறதா என்ற கேள்வியை எழுப்பும் வகையில், சமூக வலைதளங்களில் இன்று காலை முதலே ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், மூவரின் பெயருடன் இருக்கும் கேரவேன்கள் ஒரே படப்பிடிப்பு தளத்தில் நிறுத்தப்பட்டிருப்பது போல் காட்சியளித்தது. இதனால் “இந்த படம் என்ன?” என்ற ஆர்வமும், ரசிகர்களிடையே பெரும் பரபரப்பும் உருவாகியுள்ளது.
இதற்கு முன் ஆமீர்கான் அளித்த பேட்டியிலும், மூன்று கான்களும் இணைந்து நடிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, “அப்படி ஒரு கதையை உருவாக்குவது மிகப் பெரிய சவால். ஆனால் அது நடந்தால், அந்த அனுபவம் எங்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது வைரலாகும் வீடியோ, ஷாரூக்கானின் மகன் ஆர்யன் இயக்கிவரும் Bad***s of Bollywood என்ற நெட்ஃபிளிக்ஸ் சீரிஸின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீரிஸின் தயாரிப்பாளர் ஷாரூக் கான் தான். கதையை நரேட் செய்வதோடு, அவரே தனது கேரக்டராகவும் இதில் தோன்றுகிறார்.
முன்னதாக வெளியாகிய டீசரில் சல்மான் கான் இடம்பெற்றிருந்தார். இப்போது அமீர்கானும் கேமியோ ரோலில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. இதனால், “இந்த சீரிஸில் மூன்று கான்களும் ஒரே திரையில் தோன்றுகிறார்களா?” என்ற ஆவல் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இவர்கள் தவிர ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், சைஃப் அலி கான், அலியா பட், கரண் ஜோகர், ராஜமௌலி, திஷா பதானி, க்ரித்தி சனோன், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பலரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்கள்.
இந்த Bad***s of Bollywood சீரிஸ் வரும் செப்டம்பர் 18ம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியிடப்பட உள்ளது.

















