கார்த்திகை மாதச் சிறப்புத் தினத்தை முன்னிட்டு அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் இன்று விசேஷ அபிஷேக ஆராதனைகளும், அலங்கார வழிபாடுகளும் மிகச் சிறப்பாக நடைபெற்றன. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கார்த்திகையை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கே நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ராஜ அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்ததால், வின்ச் மற்றும் ரோப் கார் நிலையங்களில் நீண்ட வரிசை காணப்பட்டது. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த பக்தர்கள் குடமுழுக்கு மண்டபம் வழியாகப் படிப்பாதையில் அனுமதிக்கப்பட்டனர்; சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் முருகப்பெருமானைத் தரிசித்தனர். மாலையில் திருக்கல்யாண மண்டபத்தில் திருவிளக்கு பூஜையும், அதனைத் தொடர்ந்து சாயரட்சை பூஜைக்குப் பின் சின்னக்குமாரசுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வெளிப்பிரகாரத்தில் உலா வந்த நிகழ்வும், தங்கரதப் புறப்பாடும் பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது.
திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அபிராமி அம்மன் கோயிலில் உள்ள வள்ளி-தெய்வானை சமேத சண்முகர் சன்னதியில், சுவாமிக்கு 16 வகையான சோடச அபிஷேகங்கள் நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல், ஆர்.வி.நகர் கந்தகோட்டம் முருகன் கோயில், என்.ஜி.ஓ. காலனி மற்றும் ஒய்.எம்.ஆர். பட்டி முருகன் கோயில்களில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கந்தனுக்கு அரோகரா முழக்கத்துடன் வழிபாடு செய்தனர். சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் மூலவர் மற்றும் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு விசேஷ பாலாபிஷேகம் நடத்தப்பட்டு, சிவசுப்பிரமணிய சுவாமி வெள்ளி கவசத்துடன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில் மற்றும் காரமடை ராமலிங்க சுவாமி கோயில்களிலும் கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு ஹோமங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன. மாவட்டம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சிறப்பு ஏற்பாடுகளால், பக்தி பரவசத்துடன் அமைதியான முறையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து திரும்பினர்.

















