திருவாரூரில் பட்டப்பகலில் பயங்கரம் – மூதாட்டி மீது துணியைப் போர்த்தி கொடூரத் தாக்குதல் – கட்டையால் மூதாட்டியின் தலையில் தாக்கி 5 பவுன் தங்கச் சங்கிலி வழிப்பறி – படுகாயமடைந்த மூதாட்டி திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை – தவெக ஆட்சியில் குழந்தைகள், பெண்களை தொடர்ந்து மூதாட்டிகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல்
திருவாரூர் அருகே உள்ள நடப்பூர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் இந்திராணி (61). இவர் இன்று வழக்கம் போல் அப்பகுதியில் தனது மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு நோட்டமிட்டு வந்த மர்ம நபர் ஒருவர், மூதாட்டி தனியாக இருப்பதைப் பயன்படுத்தி திடீரென அவர் மீது துணியைப் போர்த்தியுள்ளார்.
மூதாட்டி சுதாரிப்பதற்குள் கையில் வைத்திருந்த கட்டையால் அவரது தலையில் சரமாரியாகத் தாக்கிய அந்த மர்ம நபர், மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பியோடினார்.
தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர் தப்பிச் சென்றுவிட்டார்.
இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் துடித்த இந்திராணியை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்ட பொதுமக்கள், சிகிச்சைக்காகத் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பட்டப்பகலில் அரங்கேறிய இந்தத் துணிகர வழிப்பறிச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த வைப்பூர் காவல் நிலையப் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பியோடிய மர்ம நபரை வீசித் தேடி வருகின்றனர்.
திருவாரூரில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியின் மீது துணியைப் போர்த்தி, கட்டையால் தலையில் கொடூரமாகத் தாக்கி 5 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்ததில் இருந்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பரவலாக நடைபெற்று வரும் சூழலில், தற்போது மூதாட்டிகளுக்கும் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பேட்டி: செல்வம் – தாக்குதலுக்குள்ளான மூதாட்டியின் மகன்







