மதுரை செல்லூர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சமீபத்தில் வெளியான பைசன் திரைப்படம் மாரி செல்வராஜின் வெற்றிப் படமாக இருந்தாலும், அதில் உண்மையான வரலாற்றை மறைத்து காட்டியுள்ளார். ஒரு கலைஞராக தனக்கான வலிகளை சொல்லலாம், ஆனால் அதே சமயம் கதையின் உண்மையான வரலாறும் வெளிப்படையாக சொல்லப்பட வேண்டும். குறிப்பிட்ட குழுவுக்காக படம் எடுத்தது போல தோன்றுகிறது,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது :
“மனத்தி கணேசன், காசிநாத பாஸ்கரன், ராஜரத்தினம் ஆகியோர் தமிழக மண்ணின் மைந்தர்கள். ஐயா சிவந்தி ஆதித்தனாரின் சன் பேப்பர் மில்ஸ் கபடி அணியின் பயிற்சியாளர் கிரிஸ்டோபர் ராஜன் அவர்களே அக்கால வீரர்களின் வழிகாட்டி. நடுநிலையான கலைஞராக இருக்க வேண்டும்; ஆனால் மாரி செல்வராஜ் வரலாற்றை மாறி மாறி கூறுகிறார்.
‘பைசன்’ என்கிற பெயர் அந்த மாவட்டத்தில் மனத்தி கணேசனுடன் தொடர்புடையது. ஆனால் அந்த காலத்தில் பாஸ்கர் சார், ராஜரத்தினம் சார் ஆகியோரும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் கௌரவிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு, வீடு மற்றும் அரசு வேலை வழங்கப்பட்டது.
மேலும், விளையாட்டு வீரர்களுக்கு 3% அரசு வேலை இடஒதுக்கீட்டையும் எடப்பாடி பழனிச்சாமி அரசு வழங்கியது. இதுபோன்ற உண்மையான தகவல்களை படத்தில் வெளிப்படுத்தியிருந்தால், அது உண்மையான வீரர்களுக்கு ஊக்கம் அளித்திருக்கும்.
ஆனால் உண்மையை மறைத்து, குறிப்பிட்ட சமூக உணர்வை தூண்டும் வகையில் படம் எடுத்திருப்பது வருத்தம் அளிக்கிறது. இதுபோன்ற திரைப்படங்கள் மக்களின் மனதில் வேற்றுமையை விதைக்கக்கூடும்,” என டாக்டர் சரவணன் தெரிவித்தார்.
அவர் மேலும், “மாரி செல்வராஜ் ஒரு கட்சி சார்பாக செயல்படுகிறார்; அவரது படத்திற்கான நிதியும் அந்த கட்சியிலிருந்தே வருகிறது என்கிற ஐயப்பாடும் எழுகிறது,” என கூறினார்.

















