ஐரோப்பா : பாலஸ்தீன-இஸ்ரேல் போர் வன்முறையான கட்டத்திற்கு சென்றுள்ள நிலையில், இஸ்ரேல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோஷே ஃபீக்லின் வெளியிட்ட அறிக்கை, உலக நாடுகளின் கடும் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது.
“காஸாவின் குழந்தைகள்கூட நமக்கு எதிரிகள்தான். காஸாவில் ஒரு குழந்தைகூட இருக்கக்கூடாது. காஸாவை நாம் ஆக்கிரமித்து அங்கு குடியேற வேண்டும்” என அவர் கூறியிருந்தார். இது மனித உரிமைகளைப் பொருட்படுத்தாத கொடூரமான கருத்தாக உலகம் முழுவதும் கண்டிக்கப்படுகிறது.
இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சனை கடந்த பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர் ; மேலும் 252 பேர் பணயக் கைதிகளாக அழைத்து செல்லப்பட்டனர். இதன் பின்னர் இஸ்ரேல் காஸா மீது மிகுந்த தாக்குதல்களைத் தொடங்கியது.
போர் தொடங்கியதிலிருந்து 15 மாதங்களாக காஸாவில் இரண்டுபுறமும் கடுமையான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இடையே ஒருமுறை போர் நிறுத்தம் ஏற்பட்டபோதிலும், அதை மீண்டும் புதுப்பிக்கத் தவறியதால் தற்போது மீண்டும் முழு அளவில் போர் மீண்டுள்ளது.
மனிதாபிமான பாதிப்புகள்
ஏப்ரல் 2025இல் வெளியான பாலஸ்தீன கல்வி அமைச்சக அறிக்கையின்படி, அக்டோபர் 2023 முதல் இப்போது வரை காஸாவில் 17,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். “ஒவ்வொரு எண்ணிக்கையும் ஒரு வாழ்நாள், நினைவுகள் மற்றும் இழந்த கனவுகளைக் குறிக்கிறது” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஐ.நா எச்சரிக்கையின்படி, இஸ்ரேல் முற்றுகை காரணமாக, மேலும் 14,000 குழந்தைகள் உயிரிழக்கக் கூடும் அபாயம் நிலவுகிறது.
இதே நேரத்தில், இஸ்ரேலின் முன்னாள் IDF துணைத் தலைவர் யெய்ர் கோலன், “இஸ்ரேல் குழந்தைகளை ஒரு பொழுதுபோக்காகக் கொல்கிறது” என கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். “நாம் நல்ல மனநிலை கொண்ட நாடாக மீண்டும் செயல்படாவிட்டால், தென்னாப்பிரிக்காவைப் போல இஸ்ரேலும் தீய நாடாக மாறும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் மோஷே ஃபீக்லின் பேச்சுகள், இஸ்ரேலின் அரசியல் நோக்கம் குறித்து பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. உலக நாடுகள், குறிப்பாக இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா போன்றவை, இஸ்ரேலை தனது நடவடிக்கைகளை நிறுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளன. ஆனால் இஸ்ரேல் தற்போது வரை அந்த அழைப்புகளை கண்டுகொள்ளவில்லை.