சென்னை: “தேர்தல் வந்தால் திமுகவை அடிக்க ஆளே இருக்காது” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
லண்டன், ஜெர்மனி பயணத்தை முடித்து சென்னை திரும்பிய நிலையில், இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஸ்டாலின், அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் மற்றும் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது :
முதலீடுகள்: “ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து பயணத்தில் 15,516 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளோம். இதை ‘சூப்பர் ஹிட்’ பயணம் என்று மக்களே கூறுகிறார்கள். தமிழ்நாட்டை டிரில்லியன் பொருளாதாரமாக உயர்த்துவதே எங்கள் இலக்கு.”
2026 தேர்தல்: “2026 தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெறும். அதற்கான அடித்தளமாகவே ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தைத் தொடங்கினோம். ஏற்கனவே ஒரு கோடி குடும்பங்கள் இதில் இணைந்துள்ளனர். தேர்தல் முடியும் வரை ‘ஓய்வு’ என்ற சொல்லையே மறந்துவிட வேண்டும்.”
திராவிட மாடல் 2.0: “நமது திராவிட மாடல் ஆட்சியால் தமிழகம் 11.19% வளர்ச்சியுடன் இந்தியாவின் முன்னணி மாநிலமாக உயர்ந்துள்ளது. இனி ‘திராவிட மாடல் 2.0’ உருவாக்கி, மக்களிடம் உள்ள நம்பிக்கையை தேர்தல் வரை எடுத்துச் செல்ல வேண்டும்.”
மக்கள் ஒன்றிணைவு: “தமிழகத்தின் மண், மொழி, மானத்தை காக்க மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கிறோம். எதிர்க்கட்சிகள் ஃபேக் நியூஸ், டைவர்ஷன் பாலிட்டிக்ஸ் என்றாலும், தமிழ்நாட்டை காக்கும் வலிமை நமக்கே உண்டு.”
வரவிருக்கும் செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாள் மற்றும் செப்டம்பர் 17 கரூர் முப்பெரும் விழா குறித்து, “அவை நிறைவு விழாக்கள் அல்ல; தொடக்க விழாக்கள். அதன்பின் செப்டம்பர் 20-ஆம் தேதி மாவட்ட வாரியாக ஓரணியில் தமிழ்நாடு கூட்டங்கள் நடைபெறும். இந்த வெற்றியே தமிழ்நாட்டின் வெற்றி” என அவர் வலியுறுத்தினார்.
ஸ்டாலின், “தேர்தல் நாள் வரைக்கும் பசி, தூக்கம், ஓய்வை மறந்து உழைக்க வேண்டும். 2026-லும் நாமே உதிப்போம்” என்று உறுதியளித்தார்.















