தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் காற்று ஸ்தலத்தலாக அமைந்துள்ளது. இத்தலத்தில் மூலவராக முக்தீஸ்வரர் அருள்பாலிக்கிறார். தாயார் மரகதவல்லியும், தலவிருட்சமாக வில்வமும் தீர்த்தமாக தெப்பக்குளம் விளங்குகிறது.
பெரும்பாலான சிவாலயங்களில் வருடத்தில் சில விநாடிகள் மட்டும், சூரியன் தனது ஒளிக்கிரணங்களால் சுவாமியை பூஜை செய்வார். ஆனால், இங்கு மார்ச் 10 முதல் 21 வரை, செப்டம்பர் 19 முதல் 30 வரையில், 24 நாட்கள் தொடர்ச்சியாக சூரியன் பூஜை செய்கிறார். இதனால், இங்கு நவக்கிரக சன்னதி கிடையாது.
ஒருமுறை துர்வாச முனிவர், சிவபூஜை செய்த மலர் மாலையை இந்திரனிடம் கொடுத்தார். அவன் அம்மலரை தனது வாகனமான ஐராவதத்தின் மீது வைக்க, ஐராவதம் அதை கீழே வீசியது. புனிதம் மிக்க மலரை இந்திரனும், ஐராவதமும் அலட்சியப்படுத்தியதால் கோபம் கொண்ட முனிவர், சாபமிட்டார்.
இந்திரன் தேவதலைவன் பதவியை இழந்தான், ஐராவதம் காட்டு யானையாக வாழ்ந்தது. சாபத்தின் பலனை அனுபவித்த ஐராவதம், வில்வவனமாக இருந்த இங்கு சிவனை பூஜித்தது. மனம் இறங்கிய சிவன், அதற்கு காட்சி தந்து முக்தி கொடுத்தார். பிற்காலத்தில், இவ்விடத்தில் திருமலைநாயக்கரின் அண்ணன் முத்துவீரப்ப நாயக்கர் ஆலயம் எழுப்பினார்.
இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையவும், கண்ட கனவுகள் நிறைவேறவும், எண்ணிய செயல்கள் நடைபெறவும் இங்குள்ள இரண்டு வில்வமரங்களில் வடமேற்கே உள்ள வில்வமரத்தின்கீழ் உள்ள விநாயகரிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். மாரியம்மன் தெப்பத்தின் மேற்கு கரையில் உள்ள இத்தலத்திற்கு, தெப்பமையத்தில் உள்ள மண்டபத்தின் விமானமே கோபுரமாக அமைந்துள்ளது.

ஒரே இடத்தில் நின்று அம்பாளையும், சிவனையும் தரிசனம் செய்யலாம். முன்புறம் உயரமான நந்தி, நடராஜர், கிருஷ்ணன், ஆஞ்சநேயர், சுப்பிரமணியர், துர்க்கை, விநாயகர் ஆகியோரும் உள்ளனர். கோயில் தூண்களில் உள்ள சிற்பங்கள், சிறப்பாக உள்ளன. இங்கு தெட்சிணாமூர்த்தி, பிரகார கோஷ்டத்தில் அமைந்ததோடு மட்டுமின்றி சிவனுக்கு முன்புறமுள்ள தூணில் கையில் வீணை கொண்டு, வீணை தெட்சிணாமூர்த்தியாக உள்ளது சிறப்பு.
இவரை வணங்கிட கல்வி, கேள்வி மற்றும் இசைஞானம் பெற்று சிறக்கலாம் என்பது நம்பிக்கை. இதுவரை மதுரையின் 5 பஞ்சபூத ஸ்தலங்களின் வரலாறும், அதன் சிறப்புகளையும் இதில் கண்டோம் பஞ்சபூதங்களை உள்ளடக்கி வெள்ளை, ஊதா, பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்கள் கலந்த பஞ்சவர்ண கிளியை அன்னை மீனாட்சி கையில் பிடித்துள்ளாள் . அப்பன் சிவனும் 64 திருவிளையாடல்களையும் கடம்பவனமாம் மதுரையிலேயே நிகழ்த்தியுள்ளார்.
திருவாரூரில் பிறந்தால் புண்ணியம், காஞ்சியில் வாழ்ந்தால் புண்ணியம், காசியில் இறந்தால் புண்ணியம், சிதம்பரத்தில் வழிபட்டால் புண்ணியம், திருவண்ணாமலையை நினைத்தாலே புண்ணியம் மதுரையில் பிறந்தாலும் மதுரையில் வாழ்ந்தாலும் மதுரையில் இறந்தாலும் மதுரையில் வழிபட்டாலும் மதுரையை நினைத்தாலும் புண்ணியம்.
சீறா நாகம், கறவா பசு, பிளிறா யானை, முட்டா காளை, ஓடா மான், வாடா மலை,காயா பாறை, பாடா குயில்ஷ இவை அனைத்தும் மதுரை நகரின் அந்தக்காலத்து எட்டு திசைகளைக் குறிக்கும் எல்லை ஊர்கள்.
சீறா நாகம் – நாகமலை , கறவா பசு – பசுமலை , பிளிறா யானை – யானைமலை முட்டா காளை – திருப்பாலை ஓடா மான் – சிலைமான் , வாடா மலை – அழகர்மலை காயா பாறை – வாடிப்பட்டி பாடா குயில் – குயில்குடி , இதன் சிறப்புகளையும் வரலாற்றையும் அடுத்த பாகத்தில் காணலாம்