நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகரின் மையப்பகுதியான பள்ளிபாளையம் பிரிவு சாலையில் அமைந்துள்ள கட்டிடத்தில், ‘விடியல் ஆரம்பம்’ அமைப்பின் சார்பில் ஐந்தாம் ஆண்டு புத்தகத் திருவிழா நேற்று மிகச் சிறப்பான முறையில் தொடங்கியது. வாசிப்புப் பழக்கத்தை மக்களிடையே ஊக்குவிக்கவும், குறிப்பாக மாணவர்களிடையே அறிவுத் தேடலை வளர்க்கவும் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த அறிவுத் திருவிழா, நேற்று மாலை கோலாகலமாகத் துவங்கியது. விழாவிற்கு விடியல் பிரகாஷ் தலைமை தாங்கினார். ஆயத்த ஆடை நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ராஜாராம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஈரோடு மாவட்டத் தலைவர் சண்முகவேல், ரிப்பன் வெட்டி புத்தகக் கண்காட்சியை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற தொடக்க விழாவில், நகர்மன்ற உறுப்பினர் அம்பிகா, சமூக சேவகர் சித்ரா, சூர்யா கார்மெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் மகாலட்சுமி கோபாலகிருஷ்ணன், பஞ்சாலை சண்முகம், தினக்கல்வி சசி மற்றும் மல்லிகா, ஜமுனா, ராணி, சித்ரா, யசோதா உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர். புத்தக விற்பனையின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டு, எஸ்.எஸ்.எம். கல்வி நிறுவனங்களின் தாளாளர் ரவீந்திரன் விற்பனையைத் தொடங்கி வைத்தார். விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு, குமாரபாளையம் அனைத்து வணிகர் சங்கத் தலைவர் காமராஜ் சான்றிதழ் மற்றும் புத்தகங்களைப் பரிசாக வழங்கிப் பாராட்டினார். பிரபல எழுத்தாளர்கள் அன்பழகன், கேசவ மூர்த்தி ராஜகோபால், பகலவன் மற்றும் லாரன்ஸ் ரமேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு வாசிப்பின் அவசியம் குறித்து உரையாற்றினர்.
இந்தக் கண்காட்சியில் தமிழகத்தின் முன்னனி 25-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் தங்களது ஆயிரக்கணக்கான நூல்களைக் காட்சிப்படுத்தியுள்ளன. இலக்கியம், வரலாறு, அறிவியல், சுயமுன்னேற்றம் மற்றும் குழந்தைகளுக்கான கதைப் புத்தகங்கள் எனப் பலதரப்பட்ட நூல்கள் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 வரை பத்து நாட்கள் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியில், தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியருக்குப் பேச்சுப் போட்டி, சிறுகதைப் போட்டி, நாடகப் போட்டி உள்ளிட்ட கலைப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறுபவர்களுக்கு உடனுக்குடன் புத்தகங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. நிகழ்ச்சியில் ஸ்ரீதர், ராஜ்குமார் மற்றும் ஏராளமான பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர். குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மாணவர்கள், இந்தப் பத்து நாள் அரிய வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்களது அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
