துணை முதல்வரால் வழங்கப்பட்ட கலைஞர்கள் விளையாட்டு உபகரணங்கள் திருவாரூர் மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்கவில்லை

துணை முதல்வரால் வழங்கப்பட்ட கலைஞர்கள் விளையாட்டு உபகரணங்கள் திருவாரூர் மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்கவில்லை – போட்டோவுக்கு போஸ் மட்டும் கொடுத்துவிட்டு எடுத்துச் சென்று விடுவதாக விளையாட்டு வீரர்கள் வேதனை.

தமிழ்நாடு துணை முதல்வரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 16 மாவட்டங்களைச் சேர்ந்த 6,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு 30 வகையான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேடைக்கு முன்புறம் 30 வகையான விளையாட்டு உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்த அனைத்து விளையாட்டு உபகரணங்களிலும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் இந்நாள் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் புகைப்படங்கள் ஒவ்வொரு விளையாட்டு பொருட்களிலும் பெரிய அளவில் அச்சிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த உபகரணங்களை விளையாட்டு வீரர்களுக்கு வழங்குவது போல நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதனை தொடர்ந்து நிகழ்ச்சி நிறைவடைந்த உடனேயே அந்த 30 உபகரணங்களும் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படாமல் உடனடியாக வாகனத்தில் ஏற்றி அனுப்பப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு நகராட்சிகள் மற்றும் ஏழு பேரூராட்சிகளில் உள்ள 216 வார்டுகளில் 30 வகையான விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 327 டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரே ஒரு 30 வகையான விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டு, அனைத்து பகுதிகளுக்கும் எடுத்துச் சென்று விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டதாக புகைப்படம் மட்டும் எடுத்து செல்கின்றனர் என விளையாட்டு வீரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்திற்கு மட்டும் 327 விளையாட்டு தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஒன்று மட்டுமே திருவாரூர் மாவட்டம் முழுவதும் எடுத்துச் செல்லப்பட்டு காட்சிப்படுத்தப்படுகிறது. இதனால் விளையாட்டு வீரர்களுக்கு எந்த நன்மையும் இல்லை. இந்த 30 வகையான விளையாட்டு உபகரணங்களில் முன்னாள் முதல்வர் இந்நாள் முதல்வர் புகைப்படங்கள் ஓட்டுவதற்கு ஏற்பட்ட செலவை குறைத்து விளையாட்டு வீரர்களுக்கு முழுமையாக உபகரணங்கள் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என திருவாரூர் மாவட்ட விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version