தமிழகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் பல மாவட்டங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான பொறுப்பை மாநில அரசே ஏற்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் தேங்கியிருப்பதை குறித்து சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்ட அவர், வடிகால் பணிகள் சரிவர முடிக்கப்படாததே பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு முக்கியக் காரணம் என்று வலியுறுத்தினார். “ஆண்டு கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டிருந்தும் முறையான வடிகால் வசதிகள் ஏற்படுத்தப்படாததால், சிறிது மழைக்கே நகரம் தண்ணீரில் முடங்குகிறது” என்று விஜய் கடுமையாக விமர்சித்தார்.
மேலும், மழை காரணமாக பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கு தேவையான உதவிகளை பாதுகாப்புடன் செய்து வரும்படி கழகத் தோழர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார். பொதுமக்களும் தங்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் விஜய் அறிவுறுத்தினார்.
பருவமழை காலத்தின் மீதமுள்ள நாட்களாவது மக்கள் சிரமமின்றி வாழும் வகையில், மழைநீர் வெளியேறும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அரசுக்கு விஜய் வலியுறுத்தி உள்ளார்.
















