சென்னை : கொளத்தூரில் 38 வயது பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்கேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞர், “திருமணமானதை மறைத்ததால் ஆத்திரத்தில் கொன்றேன்” என தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாச்சலம் மாவட்டத்தைச் சேர்ந்த சரஸ்வதி (வயது 38), கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அகதியான கணேசமூர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். இவர்கள் இரு பிள்ளைகளை பெற்றுள்ளனர். இதில் ஒருவரான மூத்த மகன், சிறப்பு குழந்தையாக உள்ளார். கணேசமூர்த்தி கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருகிறார்.
சரஸ்வதி சமீபத்தில் சென்னை கொளத்தூரில் வீடு வாடகைக்கு எடுத்து பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்தார். வார இறுதிகளில் கணவரை சந்திக்க கும்மிடிப்பூண்டிக்கு சென்று வந்துவருவது வழக்கமாக இருந்தது.
மறுநாள் அழைப்பு – தொலைபேசி சுவிட்ச் ஆப்
ஜூலை 18 ஆம் தேதி கணவரை சந்தித்து விட்டு வீட்டிற்கு திரும்பிய சரஸ்வதி, அதன்பிறகு அவருடைய மொபைல் போன் சுவிட்ச் ஆஃப் நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து தொடர்பு ஏற்படுத்த முடியாத நிலையில், கணேசமூர்த்தி தனது நண்பர்களிடம் தகவல் தெரிவித்து, அவரை பார்ப்பதற்காக வீட்டிற்கு செல்ல கூறியுள்ளார்.
சரஸ்வதி வீடு அருகிலுள்ள முனுசாமி என்பவர், அந்த வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் அளித்தார். கொளத்தூர் போலீசார் விரைந்து சென்று விசாரித்த போது, கதவு சாத்தப்பட்ட நிலையில் உள்ளே நுழைந்தனர். அப்போது சரஸ்வதி, குடல் வெளியேறும் அளவுக்கு அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
விசாரணையில் அதிர்ச்சி தகவல்
விசாரணையில் சரஸ்வதியின் இருசக்கர வாகனம், செல்போன் மற்றும் அரை சவரன் தங்க மோதிரம் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. மேலும், போதை பழக்கம் மற்றும் கடந்த மாதம் ஒரு விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தும், பின்னர் ஜாமினில் வெளியேறியிருந்ததும் தகவலாகியுள்ளது.
கொலைக்காக கைது செய்யப்பட்ட இளைஞர் – அதிர்ச்சி வாக்குமூலம்
இந்தக் கொலை தொடர்பாக உத்தரப் பிரதேசம் கான்பூரைச் சேர்ந்த மொய்தீன் அன்சாரி என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் கூறியது:
“நான் உண்மையாகவே சரஸ்வதியை காதலித்தேன். ஆனால் அவர் தனது திருமணத்தை மறைத்து, கணவரை ‘அண்ணன்’ என கூறி என்னை ஏமாற்றினார். சம்பவத்தன்று இருவரும் அதிகமாக மது அருந்திய நிலையில், அவரது மொபைலுக்கு வந்த அழைப்பை வைத்து வாக்குவாதம் ஏற்பட்டது. கோபத்தில் அடித்தேன். அதனால் அவர் உயிரிழந்தார்.”
“அவர் திருமணமானவர் என்றும், பாலியல் தொழிலில் ஈடுபட்டவர் என்றும் எனக்குத் தெரியாது. நான் மாதம் ₹25,000 சம்பளமாக சம்பாதித்து அவர்மீது செலவழித்தேன். ஏமாற்றியதால் கோபத்தில் கொலை செய்தேன்” என கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக கொளத்தூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.