சென்னை :
இசையமைப்பாளர் இளையராஜாவின் கச்சேரிகளில், வழக்கமாக தொடக்கமாக ஒலிப்பது “ஜனனி ஜனனி ஜகம் நீ” என்ற பக்திப் பாடலே. பல ஆண்டுகளாக சென்டிமென்டாக மாறிய இந்த பாடலை, ஆர்மோனியத்தில் இசையுடன் பாடும் போது ரசிகர்களிடையே கைதட்டல்களும் விசில்களும் எழுவது வழக்கம்.
இந்த பாடல் முதன்முதலாக 1982 ஆம் ஆண்டு கே.சங்கர் இயக்கிய தாய் மூகாம்பிகை திரைப்படத்தில் இடம் பெற்றது. ஆரம்பத்தில் பாடலை கே.ஜே.யேசுதாஸ் பாட வேண்டும் என எம்ஜிஆர் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் சூழ்நிலைகளால், இளையராஜா தானே பாடினார். பாடலின் தொடக்கத்தில் வரும் சமஸ்கிருத வரிகள் ஆதிசங்கரரின் சௌந்தர்ய லஹரியிலிருந்து எடுக்கப்பட்டவை; மீதியைக் கவிஞர் வாலி எழுதியிருந்தார்.
ஆனால், சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்ற தமிழக அரசு சார்ந்த இளையராஜா பாராட்டு விழாவில், இந்த வழக்கம் மாறியது. விழாவின் தொடக்கத்தில், “ஜனனி”க்கு பதிலாக, 1981 ஆம் ஆண்டில் வெளியான கோயில் புறா திரைப்படத்தின் “அமுதே தமிழே” என்ற பாடலை, தனது இருக்கையில் இருந்தபடியே பாடினார் இளையராஜா. புலமைப்பித்தன் எழுதிய இந்தப் பாடலை, முன்னாள் காலத்தில் பி.சுசீலா மற்றும் உமாரமணன் பாடியிருந்தனர்.
இந்த மாற்றம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. “ஜனனி பாடல் ஏன் தவிர்க்கப்பட்டது?” என்ற கேள்வியும் எழுந்தது. இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன், “இன்றைய விழாவில் பாடப்பட வேண்டிய பாடல்களின் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் தான் வழங்கினார்” என்று விளக்கம் அளித்தார். பகுத்தறிவு கொள்கையை பின்பற்றும் திமுக அரசின் காரணமாக பக்திப் பாடல் தொடக்கமாக பாடப்படாமல் இருந்திருக்கலாம் என்றும் பேசப்பட்டது.
ஆனால் விழாவின் இறுதியில், பார்வையாளர்கள் வேண்டுகோள் விடுத்தபோது, முதலில் தயங்கியிருந்த இளையராஜா, பின்னர் உணர்வுபூர்வமாக “ஜனனி ஜனனி ஜகம் நீ” பாடலை பாடி அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்தார். “என் இசை இறைவனிடமிருந்துதான் வருகிறது; அவன்தான் என்னை பாட வைக்கிறார்” என்று பலமுறை பேட்டிகளில் கூறியிருக்கும் இளையராஜா, அந்த உணர்வை அன்றைய நிகழ்ச்சியிலும் வெளிப்படுத்தியதாக ரசிகர்கள் உணர்ந்தனர்.
மேலும், சமீபத்தில் இளையராஜா, இந்தப் பாடல் பாடப்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று, பல கோடி மதிப்புள்ள வைரக் கீரிடம் மற்றும் தங்க வாளை சமர்ப்பித்ததும் குறிப்பிடத்தக்கது.