ஈரோட்டில் 224 கோடி மதிப்பில் பொங்கல் பரிசு அமைச்சர் தொடங்கி வைத்தார்!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.3,000 ரொக்கப் பணம் வழங்கும் பணி ஈரோடு மாவட்டத்தில் இன்று மிக உற்சாகமாகத் தொடங்கியது. ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட மாணிக்கம்பாளையம், திண்டல், வேப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற விழாக்களில், தமிழக வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்.

ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள 1,270 நியாய விலைக் கடைகள் வாயிலாக மொத்தம் 7,45,155 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 1,373 குடும்பங்கள் என மொத்தம் 7,46,528 பயனாளிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுகின்றனர். இதற்காகத் தமிழக அரசு ஈரோடு மாவட்டத்திற்கு மட்டும் ரூ.223.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு மற்றும் ரூ.3,000 ரொக்கப் பணம் ஆகியவை வழங்கப்படுகின்றன. மேலும், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு வழங்கும் விலையில்லா வேட்டி-சேலைகளும் இத்துடன் சேர்த்து விநியோகிக்கப்படுகின்றன.

விழாவில் உரையாற்றிய அமைச்சர் முத்துசாமி, “பொதுமக்கள் எவ்வித சிரமமும் இன்றிப் பொருட்களைப் பெற்றுச் செல்ல ஏதுவாக, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முன்கூட்டியே டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த டோக்கன்களில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் மக்கள் நியாய விலைக் கடைகளுக்குச் சென்று தங்களுக்குரிய பரிசுகளைப் பெற்றுக்கொள்ளலாம். கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், விநியோகப் பணிகளை வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார். மேலும், பிச்சாண்டம்பாளையத்தில் பொதுமக்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று அமைக்கப்பட்டுள்ள புதிய நியாய விலைக் கடையையும் அமைச்சர் இன்று திறந்து வைத்து விநியோகத்தைத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், மாநகராட்சித் துணை மேயர் வே.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, மண்டலக் குழுத் தலைவர் சுப்பிரமணியம் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். பண்டிகைக் காலங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைச் சமாளிக்க அரசு வழங்கும் இந்த ரூ.3,000 ரொக்க உதவி தங்களுக்குப் பேருதவியாக இருப்பதாகப் பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Exit mobile version