மயிலாடுதுறை அமைந்துள்ள பஞ்சகிருஷ்ண தலங்களில் ஒன்றானதும்,108வைணவ திவ்யதேசங்களில்10-வது தலமுமான தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோயிலில் மகாகும்பாபிஷேகம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள பஞ்சகிருஷ்ண தலங்களில் ஒன்றானதும், 108 வைணவ திவ்யதேசங்களில் 10-வது தலமுமான தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்:-

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த தேரழுந்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலமான செங்கமலத் தாயார் சமேத ஆமருவியப்பன் கோயிலில் இன்று மகா சம்ப்ரோக்ஷணம் எனப்படும் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த கோயில் பஞ்சகிருஷ்ண தலங்களில் ஒன்றாகவும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 10-வது தலமும், திருமங்கை மன்னரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சிறப்புக்குரியதாகும்.
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோயிலில் கடைசியாக 16 ஆண்டுகளுக்கு முன்பு 2010-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து, மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு, திருப்பணிகள் தொடங்கி அண்மையில் நிறைவு பெற்ற நிலையில், கும்பாபிஷேக விழா கடந்த செவ்வாய்க்கிழமை முதற்கால யாக சாலை பூஜையுடன் தொடங்கியது. கும்பாபிஷேக தினமான இன்று, 7-ஆம் கால யாகசாலை பூஜையின் நிறைவில், மகாபூர்ணாகுதி செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, ஆமருவியப்பன் வெள்ளி படிச்சட்டத்திலும், செங்கமலத் தாயார் வெள்ளி தாமரை வாகனத்திலும் எழுந்தருள செய்யப்பட்டு முன் செல்ல, பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை பட்டாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயில் விமானத்தை அடைந்தனர். அங்கு,
ஸ்ரீமத் அஹாபில மடம் 48-வது பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர் ஸ்ரீ வண்சடகோப ரங்கநாதர் தேசிக சுவாமிகள் முன்னிலையில் மூலவர், ராஜகோபுரம் உற்சவர் சன்னதிவிமான கலசத்தில் புனிதநீர் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முன்னதாக ஆலயம் எதிரே உள்ள திருமங்கை ஆழ்வார் கோவில் சம்ப்ரோசனம் நடைபெற்றது.

Exit mobile version