டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்திய அரசு பாதுகாக்கும் என்ற முழு நம்பிக்கை இருப்பதாக அவரது மகன் சஜீத் வசீத் ஜாய் தெரிவித்தார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், தாயார் மீது நடைபெறும் சட்டநடவடிக்கைகள், வங்கதேசத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
சஜீத் வசீத் ஜாய் கூறியதாவது:
ஷேக் ஹசீனாவுக்கு எதிராக திட்டமிட்டு பொய்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன் நீதித்துறையில் உள்ள 17 நீதிபதிகள் திடீரென நீக்கப்பட்டதும் இதற்கான சான்றாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், நாடாளுமன்ற ஒப்புதல் பெறாமல் வங்கதேச அரசியலமைப்பில் பல முக்கியமான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், தாயார் மீது அரசியல் ரீதியான சதி இடம்பெற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். “இந்தியா தலையிட்டு பாதுகாக்கவில்லை என்றால், கிளர்ச்சியாளர்கள் ஷேக் ஹசீனாவைக் கொலை செய்ய திட்டமிட்டிருந்தனர்” என்றும் சஜீத் வசீத் குற்றஞ்சாட்டினார்.
அவருடைய மற்ற குற்றச்சாட்டுகள்:
வங்கதேசத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்திற்கு முன்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசு பண உதவி செய்ததாக அவர் குற்றம்சாட்டினார்.
ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் காலத்தில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளை, தற்போது இடைக்கால அரசை வழிநடத்தும் முகமது யூனஸ் அரசு விடுவித்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
வங்கதேசத்தில் லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாத அமைப்பு சுதந்திரமாகச் செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அண்மையில் டெல்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கும் அந்த அமைப்பிற்கு தொடர்பு இருக்கக்கூடும் என்றும் அவர் சந்தேகம் தெரிவித்தார்.
வங்கதேசத்தின் தற்போதைய அரசியல் நிலைமை, நீதித்துறை மாற்றங்கள், தீவிரவாத செயல்பாடுகள் ஆகியவை குறித்து அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அந்நாட்டின் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

















