வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் மூன்றாவது நாளாக மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடல் காற்று மற்றும் கடல் சீற்றம் அதிகரித்து பூம்புகார் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுதன் என்பவருக்கு சொந்தமான 75 லட்சம் மதிப்பிலான விசைப்படகு கயிறுகள் அறுந்து தடுப்பு கற்களில் மோதி தரைதட்டி நின்றது. கற்களில் மோதி தரைதட்டியதால் அதனை மீட்கும் பணியில் பூம்புகார் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.இரண்டு விசைப்படகுகள் மூலம் காலை முதல் மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில் நீரின் அளவு குறைந்ததால் படகை மீட்கும் பணி தொய்வடைந்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட விசை படகிற்கு ரூபாய் 10 லட்சம் வரை செலவு செய்து சீரமைக்க வேண்டிய நிலைக்கு மீனவர்கள் ஆளாகியுள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட விசைப்படகுக்கு உரிய நிவாரணம் அளிக்கவும் உடனடியாக மீன்வளத்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட படகினை ஆய்வு மேற்கொண்டு அரசிற்கு உரிய பரிந்துரை செய்யவும் பூம்புகார் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் மீனவர்களின் மீன்பிடித் தொழிலை பாதிக்கும் வண்ணமாக 5 நாட்டிக்கல் மைலுக்கு மேல் விசைப்படகுகளும் ஐந்து நாட்டிக்களுக்குள்ளாக பைபர் மற்றும் நாட்டுப் படகுகளும் மீன்பிடித் தொழில் செய்ய வேண்டுமென புதிய மீன்பிடி சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மீனவர்கள் புதிய மீன்பிடி சட்டங்களை மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

















