மயிலாடுதுறை மாவட்டத்தில் சொந்த வாகனங்களை அரசுப்பணிக்கு வாடகைக்கு விடும் அரசு அதிகாரிகள்:- ஆதாரத்துடன் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து, மாவட்ட ஆட்சியரகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக ஓட்டுநர் தொழிற்சங்கத்தினர் அறிவிப்பு :-
மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டையில் உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, பின்னர் மாநில செயலாளர் பாலமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகள் தங்களது சொந்த வாகனங்களை வாடகை வாகனங்களாக பயன்படுத்தி வருகின்றனர். அதற்கான வாடகை தொகையை அதிகாரிகள் பெற்றுக் கொண்டு அரசாங்கத்திற்கு வரி மற்றும் வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றனர். இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைக் கண்டித்து செப்டம்பர் மாதம் உரிமம் பெற்ற தங்களது வாகனங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளோம் என தெரிவித்தார். கூட்டத்தில், நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்து மருத்துவ படிப்பை துவங்க உள்ள சங்கச் செயலாளர் ராமச்சந்திரன் என்பவரின் மகள் கனிமொழிக்கு அனைத்து ஓட்டுநர்களும் சால்வை அணிவித்து கேடயம் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
















