திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது என்று பாமக தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.
‘விடியல் எங்கே ?’ என்ற ஆவணத்தை வெளியிட்ட அவர், “திமுக தேர்தல் சமயத்தில் 505 வாக்குறுதிகளை அறிவித்தது. ஆனால், அதில் வெறும் 66 வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளது. மீதமுள்ள 439 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதன் அடிப்படையில் திமுக அரசு 12.94% வாக்குறுதிகளையே நிறைவேற்றியுள்ளது. தேர்ச்சி பெறுவதற்கே தேவையான 35% வாக்குறுதிகளையும் நிறைவேற்றாத நிலை” எனக் குறிப்பிட்டார்.
மேலும் அவர், “தமிழ் வளர்ச்சி மற்றும் மாநில சுயாட்சி தொடர்பாக 12 வாக்குறுதிகள் அளிக்கப்பட்ட நிலையில், அதில் 8 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஈழத் தமிழர் பிரச்சினையில் கொடுத்த 4 வாக்குறுதிகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பதாக அறிவித்தும் அதையும் நிறைவேற்றவில்லை.
இந்த ஆவணம் மூலம் திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானவை என்பதையும், தமிழகம் இன்று இருளில் தள்ளப்பட்டுள்ளதாகவும் நிரூபித்துள்ளோம். திமுக மக்களுக்கு கொடுத்தது ஏமாற்று, பொய், ஊழல், நிர்வாக சீர்கேடு மட்டுமே” எனக் கடும் விமர்சனம் செய்தார்.

















