கோவையின் தொழில் அடையாளமான அவிநாசி சாலை கொடீசியா வளாகத்தில், தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) நடத்தும் சர்வதேச ஜவுளி இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்கள் கண்காட்சியான “டெக்ஸ்பேர்-2026” சனிக்கிழமை அன்று பிரம்மாண்டமாகத் தொடங்கியது. இக்கண்காட்சியை ராம்கோ குழுமத் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான பி.ஆர்.வெங்கட்ராம ராஜா குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார். மார்ச் 9-ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இந்தச் சர்வதேச நிகழ்வில், ஜவுளித்துறையின் எதிர்காலத் தொழில்நுட்பங்கள் மற்றும் சவால்கள் குறித்த முக்கிய விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய சைமா தலைவர் துரை பழனிசாமி, தற்போதைய உலக அரசியல் சூழல் இந்திய ஜவுளித்துறையில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளைப் பகிரங்கப்படுத்தினார். மேற்காசிய நாடுகளில் திடீரென உருவெடுத்துள்ள போர்ச் சூழல் காரணமாக, இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கவலை தெரிவித்தார். போர் நீடித்தால் கண்டெய்னர் தட்டுப்பாடு, கப்பல் போக்குவரத்து தாமதம் மற்றும் காப்பீட்டுச் செலவுகள் உயரும் அபாயம் உள்ளது. குறிப்பாக, கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டால் பாலியெஸ்டர் நூலிழை தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிவிடும் என்றும் அவர் எச்சரித்தார். மேலும், பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரி இந்திய ஆலைகளின் போட்டித்திறனைக் குறைப்பதாகவும், சர்வதேச விலையை விட இந்தியப் பருத்தி 20 சதவீதம் அதிகமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கண்காட்சி குறித்துப் பேசிய சைமா துணைத்தலைவர் கிருஷ்ணகுமார், இந்த ஆண்டு தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு இந்திய மாநிலங்கள் மட்டுமன்றி ஸ்விட்சர்லாந்து, இத்தாலி, ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளிலிருந்து 240 நிறுவனங்கள் 258 அரங்குகளில் பங்கேற்றுள்ளதாகத் தெரிவித்தார். சுமார் ஒரு லட்சம் பார்வையாளர்கள் இக்கண்காட்சிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பி.ஆர்.வெங்கட்ராம ராஜா மற்றும் சிஐடிஐ தலைவர் பி.அஷ்வின் சந்திரன் ஆகியோர் பேசுகையில், ஜவுளித்துறையில் நிலவும் நிலையற்ற வருவாய் மற்றும் சவால்களைச் சமாளிக்கத் தானியங்கி முறைகளும் (Automation), நவீன தொழில்நுட்ப மாற்றங்களும் மட்டுமே தீர்வாகும் என வலியுறுத்தினர். மத்திய அரசின் சலுகைகளைத் துரிதமாகப் பயன்படுத்தித் தொழிற்சாலைகளை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்த வேண்டியது அவசியம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். மத்திய அமைச்சகத்தின் இயக்குநர் சுரேஷ் பாபுஜி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வின் இறுதியில் சைமா இணைத் தலைவர் சிவராஜ் நன்றி கூறினார்.














