’நெட்பிளிக்ஸ்’ தளத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற தொடர் ’அடலசென்ஸ்’. பிலிப் பரந்தினி இயக்கத்தில் நான்கு எபிசோடுகளில் இந்தத் தொடர் வெளியானது. ஒட்டுமொத்த தொடரும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது.
இந்தத் தொடரில் ஜேமி மில்லர் என்ற கதாபாத்திரத்தில் நடித்த இங்கிலாந்தைச் சேர்ந்த 15 வயதான ஓவன் கூப்பர், தனது அசாத்திய நடிப்பால் தனி முத்திரை பதித்தார். பள்ளி மாணவனாக இருந்தபோது சக தோழியை கொலை செய்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளான பின்னர், ஜேமி மில்லரின் வாழ்க்கை எப்படி தலைகீழாக மாறியது என்பதை மையமாக வைத்து இந்தத் தொடர் உருவாக்கப்பட்டிருந்தது.
இந்த தொடரில் உளவியல் நிபுணருடன் பேசும் காட்சியில் தொடர் வசனங்களை பேசிவிட்டு ஜேமி மில்லர் மேஜையில் ஓங்கித் தட்டும் காட்சி மெய்சிலிர்ப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்தது. குழந்தை வளர்ப்பு, தொழில்நுட்ப வளர்ச்சியால் குழந்தைகள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றி பேசியதால் இந்த தொடருக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிட்டியது.
இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான எம்மி விருதுகள் வழங்கும் விழாவில், அடலசென்ஸ் தொடருக்காக சிறந்த துணை நடிகருக்கான விருது ஓவன் கூப்பருக்கு வழங்கப்பட்டது. இதன்மூலம் மிக இளம் வயதில் எம்மி விருதை வென்றவர் என்ற பெருமையை ஓவன் கூப்பர் பெற்றுள்ளார்.
அடலசென்ஸ் இணையத் தொடரில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ‘வூதரிங் ஹைட்ஸ்’ (Wuthering Heights) மற்றும் பிபிசி தொடரான ஃபிலிம் கிளப்( Film Club) உள்ளிட்ட தொடர்களில் ஓவன் கூப்பர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவரது சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் நான்கரை கோடி முதல் ஆறரை கோடி ரூபாய் வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
















