வயல்வெளிகளில், சாமியை தூக்கிக் கொண்டு செல்லும் எல்லை ஓட்டத் திருவிழா, கிராமத்திற்குள் வந்த அம்மனுக்கு, வீதி முழுவதும் தலை வாழை இலை போட்டு, கருவாட்டு குழம்பு, முட்டை, கொழுக்கட்டை, கீரை, மாவிளக்கு ஆகியவை படைத்து நூற்றுக்கணக்கான பெண்கள் வினோத வழிபாடு :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மன்னம்பந்தலில் பொன்னியம்மன், பிடாரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் வைகாசி உற்சவம் காப்பு கட்டுதலுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான எல்லை ஓட்டம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. எல்லை காவல் தெய்வங்களான பொன்னியம்மன் மற்றும் பிடாரி அம்மனை தோள்களில் சுமந்தவாறு பக்தர்கள் வயல்வெளிகள் காடு மேடுகள், உள்ளிட்ட ஊரின் எல்லையை சுற்றி வந்தனர். தொடர்ந்து அம்பேத்கர் காலனி பகுதிக்கு அம்மன்கள் இருவரையும் பக்தர்கள் தோளில் சுமந்தவாறு எடுத்து வந்தனர். அப்போது தெருமுழுவதும், வாசலில் தலைவாழை இலை போட்டு, அம்மனுக்கு பிடித்த மண்பானையில் செய்த, கருவாட்டு குழம்பு, முட்டை, முருங்கைக்கீரை, கொழுக்கட்டை, ஆகியவற்றை படையல் இட்டு மாவிளக்கு மாவு விளக்கு ஏற்றி, சீர் வரிசைகள் வைத்து பொதுமக்கள் வழிபாடு செய்தனர். நிகழ்ச்சியை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது பெண்கள் அருள் வந்து ஆடியது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.
